‘நியூஸிலாந்தில் மிரட்டுவாரா தோனி?’- சச்சின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு | MS Dhoni will breaking Sachin Tendulkar’s record?

வெளியிடப்பட்ட நேரம்: 09:28 (21/01/2019)

கடைசி தொடர்பு:09:41 (21/01/2019)

‘நியூஸிலாந்தில் மிரட்டுவாரா தோனி?’- சச்சின் சாதனையை முறியடிக்க வாய்ப்பு

தோனி

மகேந்திர சிங் தோனி, இந்த ஆண்டை அட்டகாசமாகத் தொடங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில், இவர் அடுத்தடுத்து மூன்று அரை சதங்களை விளாசினார். அந்தத் தொடரில், தொடர் நாயகன் விருதையும் அவர் பெற்றார். கடந்த ஆண்டு, தோனியின் பேட்டிங்கிற்கும் தற்போதைய ஆட்டத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் காணப்படுகின்றன. 2018-ல் 20 போட்டிகளில் விளையாடி 275 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அவரால் முன்புபோல ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைக்க முடியவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தது. ஆஸ்திரேலியா தொடரில், இரண்டு போட்டிகளில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று போட்டியை தித்திப்பாக முடித்து வைத்த தோனி, தன் மீதான விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். தோனி ஃபார்ம் தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தொடக்க ஆட்டக்காரர் தவான் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

கிரிக்கெட்

இந்நிலையில், இந்திய அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 ஒருநாள் போட்டிகள், 3  டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது. நியூஸிலாந்து தொடரில் தோனி இதே ஆட்டத்தை வெளிப்படுத்தினால், கிரிக்கெட்டில் அடுத்த மைல்கல்லை எட்டுவார். நியூஸிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரைப் பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர் 652 ரன்கள் (18 போட்டிகள்), சேவாக் 598 ரன்கள் (12 போட்டிகள்) இவர்களுக்கு அடுத்தபடியாக தோனி 456 ரன்கள் (10 போட்டிகள்) எடுத்துள்ளார். இந்தத் தொடரில், தோனி இன்னும் 197 ரன்கள் எடுத்தால், நியூஸிலாந்தில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பார். 2009-ம் ஆண்டில்  நியூஸிலாந்து சுற்றுப்பயணத்தின்போது, தோனி தொடர்ச்சியாக 6 அரை சதங்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.