`உங்கள் நடவடிக்கை சாதாரணமானது அல்ல!’ - ஃபெடரரைப் புகழ்ந்துதள்ளிய சச்சின் | Sachin Tendulkar has react on a viral video concerning Roger Federer

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (21/01/2019)

கடைசி தொடர்பு:13:40 (21/01/2019)

`உங்கள் நடவடிக்கை சாதாரணமானது அல்ல!’ - ஃபெடரரைப் புகழ்ந்துதள்ளிய சச்சின்

உலகின் சிறந்த டென்னிஸ் வீரர்கள் பங்குபெறும் ஆஸ்திரேலியா ஓப்பன் டென்னிஸ் தொடர், தற்போது மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் , ரஷ்ய வீராங்கனை மரிய ஷரபோவா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விளையாடிவருகின்றனர். 

இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ஆட்டத்தில், ரோஜர் ஃபெடரரும், கிரீஸ் நாட்டைச் சேர்ந்த சிட்சிபாசுஸும் மோதினர். முதல் செட் போட்டி விறுவிறுப்படைய ஆரம்பித்தது. கடுமையான போராட்டத்துக்குப் பிறகு, ஃபெடரர் முதல் செட்டை 7- 6 என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார். அடுத்த செட்டில் சுதாரித்துக்கொண்ட சிட்சிபாஸ், ஃபெடரருக்கு கடுமையான நெருக்கடிகொடுத்தார். முடிவில் 6-7, 7-6, 7-5, 7-6 என்ற செட் கணக்கில் சிட்சிபாஸ் வெற்றிபெற்றார். இந்தத் தோல்வியின்மூலம், ஆஸ்திரேலியா ஓப்பனில் இருந்து ஃபெடரர் வெளியேறினார். 

ரோஜர் ஃபெடரர்

இதற்கு முன்னதாக, மெல்போர்னில் உள்ள ஒரு பாதுகாப்பு அறைக்குள் செல்வதற்காக ஃபெடரர் வந்தார்.  அப்போது, அரங்கத்தில் இருந்த பாதுகாவலர், அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கேட்டார். அடையாள அட்டையைத் தான் அணிந்து வராததால், ஃபெடரர் எந்த வாக்குவாதத்திலும் ஈடுபடாமல், தனது உதவியாளர் வருகைக்காக  நுழைவு வாயிலில் காத்திருந்தார். உதவியாளர் வந்தவுடன், அடையாள அட்டையைக் காண்பித்துவிட்டு உள்ளே சென்றார். இவரின் செயல் வீடியோவாக வெளியாகி, உலக அளவில் உள்ள அவரது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

சச்சின்

தற்போது, ஃபெடரரின் இந்தச் செயலை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சினும் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “ இந்த வீடியோவைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆஸ்திரேலியா ஓப்பன் தொடரில், பாதுகாவலர் தன் வேலையை மிகச் சிறப்பாகச் செய்துள்ளார். அதேபோன்று, ஃபெடரரின் செயலும் பாராட்டுக்குரியது. இன்றைய தேதிகளில், இதுபோன்ற நடவடிக்கை சாதாரணமானது அல்ல. இதுபோன்ற செயல்கள்மூலம் ரோஜர் ஃபெடரர் போன்ற பெரிய விளையாட்டு வீரர்களுக்கு மக்களிடையே இன்னும் மரியாதை அதிகரிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சச்சினின் பதிவும், அவரது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘ சிறந்த மனம் படைத்த ஒருவரால் மட்டுமே இப்படி வெளிப்படையாகப் பாராட்ட முடியும்’, ‘ இவரிடமிருந்து அனைத்து வீரர்களும் அதிகம் கற்க வேண்டும்’  ‘ சிறந்த நிகழ்வு’ எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.