சிகிச்சைக்குப் பணமில்லாமல் தவிக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் - மருத்துவச் செலவை ஏற்ற கங்குலி | Sourav Ganguly comes forward to help Jacob Martin

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (21/01/2019)

கடைசி தொடர்பு:15:26 (21/01/2019)

சிகிச்சைக்குப் பணமில்லாமல் தவிக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் - மருத்துவச் செலவை ஏற்ற கங்குலி

கங்குலி


இந்தியாவில், கிரிக்கெட் என்பது கோடிகளைக் குவிக்கும் விளையாட்டாக இருந்துவருகிறது. இந்திய அணியில் இடம்பிடித்தாலே லட்சங்களில்தான் சம்பளம். துலீப் கோப்பை, ரஞ்சி டிராபி என உள்ளூர் தொடர்களில் அசத்தும் வீரர்கள், ஐபிஎல் ஏலத்தில் கோடிகளை அள்ளுகிறார்கள். ஆனால், சாலை விபத்தில் காயமடைந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜேக்கப் மார்ட்டின், மருத்துவச் செலவுக்குப் பணம் இல்லாமல் தவித்துவருகிறார். ஒரு நாள் சிகிச்சைக்கே சுமார் 70 ஆயிரம் வரை செலவாகிறது. மருத்துவச் செலவு  இப்போதே 11 லட்சத்தைத் தாண்டிவிட்டது என்கிறார்கள் அவரது குடும்பத்தினர். 

மார்டின்


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் தலைமையின் கீழ், இவர் 10 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி உள்ளார். ரஞ்சி போன்ற உள்ளூர் தொடர்களில் பரோடா அணியின் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார். இவரது தலைமையின் கீழ், பரோடோ அணி ரஞ்சிக் கோப்பையைக் கைப்பற்றியது. 46 வயதான ஜேக்கப், கடந்த சில நாள்களுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கினார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் நுரையீரல் மற்றும் கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் தற்போது வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார். 

இவரது மனைவி, உதவிகேட்டு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார். பிசிசிஐ, இவரது மருத்துவச் செலவுக்காக 5 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறியுள்ளது. பரோடோ கிரிக்கெட் சங்கம் ரூ.3 லட்சம் தர முன்வந்துள்ளது. 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அவரது குடும்பத்துக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்யத் தயார் எனத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகப் பேசியுள்ள கங்குலி, ``மார்ட்டினும் நானும் ஒன்றாக விளையாடியுள்ளோம். அவர், மிகவும் அமைதியானவர். காயங்களிலிருந்து அவர் விரைவில் குணமடைய  பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தினர் தனியாக இருப்பதாகக் கவலைப்பட தேவையில்லை. என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

ரவி சாஸ்திரி


மார்ட்டின் விபத்தில் சிக்கியதும், முதலில் உதவிக்கரம் நீட்டியது பரோடோ கிரிக்கெட் சங்க முன்னாள் செயலாளர் சஞ்சய் பட்டேல்தான். அவர்தான் மற்ற நண்பர்களைத் தொடர்புகொண்டு உதவி கேட்டுள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உதவுவாக வாக்குறுதி அளித்துள்ளார். தற்போது அவர் நியூஸிலாந்து சுற்றுப்பயணத்தில் உள்ளார். மேலும் யூசுப் பதான், இர்ஃபான் பதான், முனாஃப் பட்டேல் ஆகியோர் மார்ட்டின் குடும்பத்தினருக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளனர்.