தொடர் தோல்விகள்... ஆனாலும் ஃபெடரர் ஏன் ஓய்வை வெறுக்கிறார்? #AustralianOpen | Why Roger Federer not announcing his retirement despite a series of defeats?

வெளியிடப்பட்ட நேரம்: 17:31 (21/01/2019)

கடைசி தொடர்பு:17:31 (21/01/2019)

தொடர் தோல்விகள்... ஆனாலும் ஃபெடரர் ஏன் ஓய்வை வெறுக்கிறார்? #AustralianOpen

``இது என்னுடைய நீண்ட நாள் ஆசை. இப்போது என்னுடைய வாழ்க்கையில் சில வேடிக்கைகளை முயற்சி செய்து பார்க்க விரும்புகிறேன். நீண்ட காலமாக இதை தவறவிட்டுவிட்டேன்''

தொடர் தோல்விகள்... ஆனாலும் ஃபெடரர் ஏன் ஓய்வை வெறுக்கிறார்? #AustralianOpen

37 வயது தோனியும், 37 வயது ஃபெடரரும் அதிகம் எதிர்கொள்ளும் கேள்வி 'எப்போது ஓய்வு?' என்பதே. ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மூன்று மேட்ச்களிலும் அரை சதம் அடித்து மேட்ச் வின்னராகி, மேன் ஆஃப் தி சீரிஸ் பட்டமும் வென்று 2019 உலகக்கோப்பை வரை  அணியில் தன்னுடைய இடத்தை உறுதி செய்துவைத்திருக்கிறார் தோனி. ஆனால், இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 99 ஏ.டிபி பட்டங்கள் என டென்னிஸின் மிகப்பெரிய ஜாம்பவானாக இருக்கும் ரோஜர் ஃபெடரர் ஆண்டின் ஆரம்பத்திலேயே மீண்டும் ஒரு முறை ஏமாற்றம் அளித்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலிய ஓப்பனை வென்றுவந்த உலகின் மாவீரன் மூன்றாவது ஆண்டாக ஹாட்ரிக் வெல்வார் என்கிற எதிர்பார்ப்பை உடைத்துப் போட்டிருக்கிறார் 20 வயதான கிரீஸீன் சிட்சிப்பாஸ்.  

ஃபெடரர் Australian Open

முதல் செட்டை டை பிரேக்கரில்தான் வென்றார் ரோஜர் ஃபெடரர். ஆனால், அதற்கு அடுத்த மூன்று செட்களை ஃபெடரருக்கு விட்டுத்தராமல் போராடி வென்றார் சிட்சிப்பாஸ். 6-7, 7-6, 7-5, 7-6 என டை பிரேக்கரோடு ஆட்டம் முடிந்தது. ஆஸ்திரேலிய ஓப்பனில் தோல்வியடைந்தால் ரோஜர் ஃபெடரர் ஓய்வை அறிவித்துவிடுவார் எனப்பலரும் எதிர்பார்க்க, அங்குதான் அதிர்ச்சிக் கொடுத்தார் ரோஜர் ஃபெடரர். ``கடந்த 3 ஆண்டுகளாக நான் விளையாடாமல் இருந்த ஃப்ரெஞ்ச் ஓப்பனில் இந்த ஆண்டு விளையாடப்போகிறேன். பெரிய பிரேக் எடுக்க வேண்டும் என்பதில் எனக்கு இப்போது விருப்பம் இல்லை'' என்றார் ஃபெடரர்.

களிமண் தரையில் ஃபெடரர் ராஜா இல்லை. இங்கே ரஃபேல் நடால்தான் மாமன்னன். இதுவரையிலான தனது கேரியரில் ஒரே ஒருமுறை மட்டுமே ப்ரெஞ்ச் ஓப்பனை வென்றிருக்கிறார் ஃபெடரர். நான்கு முறை இறுதிப்போட்டிகளில் ரஃபேல் நடாலிடம் தோல்வியடைந்திருக்கிறார். தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக ப்ரெஞ்ச் ஓப்பன் பட்டத்தைக் கைப்பற்றி வைத்திருப்பவரும் ரஃபேல் நடால்தான். அப்படிப்பட்ட ஆடுகளத்துக்கு, தன்னுடைய சோதனைக்களத்துக்குத்தான் 37 வயதில் திரும்பப்போவதாக அறிவித்திருக்கிறார் ஃபெடரர்.  

டென்னிஸ் Australian Open

தோல்விகள் துரத்த ஆரம்பித்ததுமே புல் தரையிலான போட்டிகளில்தான் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார் ஃபெடரர். அதனால்தான் கடந்த மூன்று ஆண்டுகளாக ப்ரெஞ்ச் ஓப்பனில் கலந்துகொள்வதை தவிர்த்து ஆஸ்திரேலிய, விம்பிள்டன், யு.எஸ் ஓப்பன் போட்டிகளில் கவனம் செலுத்திவந்தார். ப்ரெஞ்ச் ஓப்பன் விளையாடுவதில்லை என்கிற ஃபெடரரின் முடிவு அவருக்கு நல்ல வெற்றிகளையும் கொடுத்தது. பல ஏ.டி.பி போட்டிகளில் வென்றதோடு, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலிய ஓப்பனையும் வென்றுவந்தார். இந்த ஆண்டும் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் காலிறுதிக்கு முன்பாகவே வெளியேறியிருக்கிறார் ஃபெடரர். ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டவர் ஏன் ப்ரெஞ்ச் ஓப்பனில் விளையாடப்போகிறேன் என்று அறிவிக்கிறார்?

காரணம் தோல்விகளை இப்போது சந்திக்க ஆரம்பித்தவர் இல்லை ரோஜர் ஃபெடரர். 2013-ம் ஆண்டில் இருந்தே சரிவு தொடங்கிவிட்டது. தொடர்ந்து தோல்விகள். 2017 ஆஸ்திரேலிய ஓப்பன் வரை எந்த ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் ரோஜர் ஃபெடரர் வெல்லவில்லை. ஆனாலும், அவர் ஆட்டத்தைக் கைவிடவில்லை. 2014, 2015 விம்பிள்டன், 2015 அமெரிக்க ஓப்பன் போட்டிகளில் தொடர்ந்து ஜோகோவிச்சிடம் தோல்வியடைந்து வெளியேறினார் ஃபெடரர். அப்போதே ஓய்வுகுறித்த கேள்விகள் துரத்த ஆரம்பித்தன. கிட்டத்தட்ட அதே கேள்விகளுடன் 5 ஆண்டுகளாக கம்பேக் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார் ஃபெடரர்.  

எப்படித் தொடர்ந்து தோல்விகளில் இருந்து ஃபெடரரால் மீண்டுவர முடிகிறது? உடல் வலிமையைவிட மனவலிமை அதிகம் கொண்டவர் ஃபெடரர். அதனால்தான் தொடர்ந்து பல தோல்விகளைச் சந்தித்த ப்ரெஞ்ச் ஓப்பனிலேயே கலந்துகொள்ளப்போகிறேன் என 37 வயதிலும் அவரால் சவால்விடமுடிகிறது.

டென்னிஸ் Australian Open

37 வயதில் ஏன் ஃபெடரர் ப்ரெஞ்ச் ஓப்பனில் விளையாட வேண்டும்... அதற்குப் பதிலாக அவர் விம்பிள்டனுக்குத் தயாராகலாமே என்பதுதான் பலரது கேள்வி. ஆனால், தன் கேரியரில் கடைசி சீஸனாக 2019 ப்ரெஞ்ச் ஓப்பனை ஃபெடரர் விளையாட நினைக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அது உண்மையாக இருந்தால் 2019 டென்னிஸின் மாவீரனுக்கு விடை கொடுக்கும் ஆண்டாக இருக்கும். ப்ரெஞ்ச் ஓப்பனைத் தொடர்ந்து விம்பிள்டனில் விளையாடிவிட்டு ஃபெடரர் தனது ஓய்வை அறிவிக்கலாம் என்கிறார்கள் டென்னிஸின் மூத்த வர்ணனையாளர்கள். ஆனால், ஓய்வு முடிவை எடுக்கவேண்டியவர் ஃபெடரர்தான். ஆஸ்திரேலிய ஓப்பன் தோல்விக்குப் பிறகு ``இது என்னுடைய நீண்ட நாள் ஆசை. இப்போது என்னுடைய வாழ்க்கையில் சில வேடிக்கைகளை முயற்சி செய்து பார்க்கவிரும்புகிறேன். நீண்ட காலமாக இதைத் தவறவிட்டுவிட்டேன்'' என்று சொல்லியிருக்கிறார் ஃபெடரர்.

டென்னிஸ் கரியரின் கடைசிக்கட்டத்துக்கு வந்துவிட்டேன் என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஃபெடரர். இறுதிக்கட்டத்தில் க்ளே, கிராஸ் என்கிற வேறுபாடெல்லாம் இல்லாமல் 20 வயது இளைஞனாக எல்லாவிதமான டென்னிஸையும் ஆடியதுபோல ஆடவேண்டும் என்று துடிக்கிறார் ஃபெடரர்.

ஆமாம்... டென்னிஸில் 2019 ஃபெடரர் ஆண்டாக முடியவிருக்கும் தங்கத்தருணம் நம்மை நெருங்கிக்கொண்டிருக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்