‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை | I was very disappointed with the injury - prithvi shaw

வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (22/01/2019)

கடைசி தொடர்பு:14:51 (22/01/2019)

‘காயங்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தது; மீண்டு வருவேன் ”- ப்ரித்வி ஷா நம்பிக்கை

ப்ரித்வி ஷா

அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர், இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் ப்ரித்வி ஷா. கடந்த ஆண்டு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார். அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்திய ப்ரித்வி ஷா, அந்தத் தொடரில் 3 போட்டிகளில் விளையாடி 237 ரன்கள் குவித்தார்.

கிரிக்கெட்

இந்த ஆட்டம்,  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு இவரைத் தேர்வுசெய்ய உதவியது. துரதிர்ஷ்டவசமாக, பயிற்சி ஆட்டத்தின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதியுற்றார். இதன் காரணமாக, ஆஸ்திரேலியா தொடரில் இருந்து வெளியேறினார். தொடர்ந்து காயத்திற்கு சிகிச்சை எடுத்துவருகிறார். இந்தத் தொடரில், விளையாடாதது தனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்ததாக ப்ரித்வி ஷா குறிப்பிட்டிருந்தார். 

காயம்

'இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கு முன்பாக, காயத்தில் இருந்து மீண்டு வருவேன்' என ப்ரித்வி ஷா தற்போது நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகப் பேசியுள்ள ப்ரித்வி ஷா,“ ஐபிஎல் தொடருக்கு முன்பாக நான் முழுஉடற்தகுதியை எட்டிவிடுவேன் அதற்காக நான் கடுமையாக உழைத்துவருகிறேன். ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாக சிட்னியில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினோம். நான் மிட் விக்கெட் திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்தேன். அஷ்வின் பந்துவீச்சின்போது, என்னை நோக்கி வந்த பந்தை பிடிப்பதற்காக பின்புறமாகக் குதித்தேன். அதில் எனது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.

ஷா

இதையடுத்து, நான் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கவில்லை. இரண்டாவது போட்டியில் விளையாடுவதற்காகக் கடுமையாக முயற்சிசெய்தேன். வலி அதிகமாக இருந்ததால் என்னால் அந்தத் தொடரில் விளையாட முடியாமல்போனது. இது, எதிர்பாராமல் நிகழ்ந்தது. ஆஸ்திரேலியாவில் விளையாட ஆர்வமாக இருந்தேன். காயங்களால் அது முடியாமல் போனது. நான் மிகுந்த மனவேதனையில் இருந்தேன். அணியினர் எனக்கு உறுதுணையாக இருந்தனர். ஏனெனில், இந்தத் தொடருக்காக நான் கடுமையாகப் பயிற்சி செய்தேன். இங்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தேன். இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதில் மகிழ்ச்சி.