`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்!’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட் | Let’s Not Overreact,’ Rahul Dravid on Pandya-Rahul Controversy

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (22/01/2019)

கடைசி தொடர்பு:18:40 (22/01/2019)

`ஓவர் ரியாக்ட் செய்யாதீர்கள், ப்ளீஸ்!’ - பாண்ட்யா - ராகுல் சர்ச்சை குறித்து ராகுல் டிராவிட்

பாண்ட்யா- ராகுல் சர்ச்சை குறித்துப் பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய ஜூனியர் அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட், ``வீரர்களுக்கு சரியான வழிகாட்டுதல் அவசியம்’’ என தெரிவித்துள்ளார்.

ட்ராவிட்

கரண் ஜோஹர் நடத்தி வரும் `காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு அவர்களுக்கு `ஷோகாஸ்' நோட்டீஸும் அனுப்பப்பட்டது. இந்த சர்ச்சை குறித்து ஹர்பஜன் சிங், வீரர்கள் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.`அவர்களும் மனிதர்கள் தானே!' என்று வீரர்களுக்கு ஆதரவாக தனது குரலை ஒலித்தார் கங்குலி. இந்த சர்ச்சைப் பேச்சால் இருவரும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பை இழந்தனர். அதேபோல் நியூசிலாந்து சுற்றுப்பயணமும் அவர்களுக்கு எட்டாக்கனிதான். இந்த நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள ராகுல் டிராவிட்,` இந்தப் பிரச்னையைப் பெரிதுபடுத்தவேண்டிய அவசியமில்லை. வீரர்கள் கடந்தகாலங்களில் தவறு செய்யவில்லை என்று கூற முடியாது.

பாண்ட்யா

எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் இருக்க, நாம்தான் அவர்களுக்கு அறிவுரை கூற வேண்டும். மற்றபடி இதைப் பெரிதாகப் பேசவேண்டிய தேவையில்லை. தண்டனை வழங்குவதற்குப் பதிலாக, அவர்களுக்கு இதுதொடர்பாக அறிவுறுத்துவது முக்கியமானதாகும். எல்லாரும் ஒரே சூழல், பின்னணியிலிருந்து வருவதில்லை. வீரர்கள் வெவ்வேறு அணிகளிலிருந்து வருகின்றனர். அவர்களுக்கான பொறுப்புகளை உணர்த்த வேண்டும். இதேபோல இனி நடக்காது என அவர்களும் உறுதியளிக்க வேண்டும். சீனியர்களிடமிருந்து அவர்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். நான், என் பெற்றோர்கள் மற்றும் சீனியர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவர்கள்தான் என் ரோல் மாடல். யாரும் எனக்கு அறிவுரை கூற வேண்டிய தேவை ஏற்பட்டதில்லை. நானே உள்வாங்கிக்கொண்டு கற்றுக்கொள்கிறேன். மிகச்சிறந்த கற்றல் முறை என்பது வீரர்களின் டிரெஸ்ஸிங் ரூமில் உள்ள சீனியர்களிடமிருந்து தான் தொடங்குகிறது'' என்றார்.