புஜாரா ரிட்டர்ன்... சக்சேனா அசத்தல் ஃபார்ம்... ரஞ்சி அரையிறுதி அப்டேட்! | Ranji trophy semi-final preview

வெளியிடப்பட்ட நேரம்: 15:56 (23/01/2019)

கடைசி தொடர்பு:15:56 (23/01/2019)

புஜாரா ரிட்டர்ன்... சக்சேனா அசத்தல் ஃபார்ம்... ரஞ்சி அரையிறுதி அப்டேட்!

கடந்த சீஸன்களில் இருக்கிற இடம் தெரியாமல் இருந்த கேரள அணி, இந்த சீஸனின் ஒவ்வொரு போட்டியிலும் தன் இருப்பை நிரூபித்துக்கொண்டே இருக்கிறது. விதர்பாவின் ஆகப்பெரும் பலம் பேட்டிங் லைன் அப் என்றால், கேரளாவுக்குப் பெளலிங் லைன் அப்.

2018-19 சீஸனின் ரஞ்சி கோப்பை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. கர்நாடகா, விதர்பா, சௌராஷ்ட்ரா அணிகளுடன் முதன்முறையாக கேரள அணியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. வயநாட்டில் நாளை தொடங்கவுள்ள போட்டியில் கேரள அணி விதர்பாவை எதிர்கொள்கிறது. செளராஷ்ட்ரா - கர்நாடகா அணிகள் மோதும் மற்றொரு போட்டி பெங்களூருவில் நடக்கிறது. அரையிறுதியில் பங்கேற்கும் அணிகளின் ப்ளஸ், மைனஸ் என்ன என்பதைப் பற்றிய ஓர் அலசல்!

ரஞ்சி ரவுண்ட் அப்


விதர்பா: 
நடப்பு சாம்பியனான விதர்பா அணி இந்த முறையும் பலமான பேட்டிங் லைன் அப்புடன் களமிறங்கியது. ஃபியஸ் ஃபசல், அக்ஷய் வாக்தர் ஆகிய இருவரின் சதத்துடன் தொடங்கியது முதல் போட்டி. முதல் நான்கு போட்டிகள் டிராவில் முடிந்தது. பௌலர்கள் யாரும் சோபிக்கவில்லை. இருப்பினும் பேட்ஸ்மென்களின் நிலையான ஆட்டத்தால் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றது. குறிப்பாக மும்பைக்கு எதிரான போட்டியில் வாசிம் ஜாஃபரின் 178 ரன்களும், அக்ஷய் வாக்ரே மற்றும் ஆதித்யா சர்வேட்டின் விக்கெட் வேட்டையும் பெரும் பலமாக அமைந்தது. அதனால் பலம் வாய்ந்த மும்பை அணியை எளிதாக வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி பெற்றனர்.

மொத்தத்தில் முதல் சுற்று போட்டிகளில் மெச்சத்தக்க ஆட்டத்தை ஆடாவிட்டாலும் பொறுப்பாக ஆடி தோல்வி பெறாமல் காலிறுதிக்கு வந்தது விதர்பா அணி. காலிறுதியில் ஆடியதெல்லாம் வேற லெவல். காலிறுதியில் உத்தரகாண்ட் முதல் இன்னிங்ஸில் 355 ரன்கள் எடுக்க, விதர்பா அநாயசமாக 629 ரன்கள் எடுத்து, மற்றொரு இன்னிங்ஸ் வெற்றியுடன் அரையிறுதிக்குத் தகுதிபெற்றது. 

டாப் ஆர்டர் பேட்டிங் வரிசைதான் விதர்பா அணியின் பெரும்பலம். ஃபியஸ் ஃபசல், அகஷய் வாக்தர், வாசிம் ஜாபர் என ஒவ்வொரு போட்டியிலும் யாராவது ஒருவர் சதம் அடிக்கின்றனர். குறிப்பாக, வாசிம் ஜாபர் இந்தத் தொடரில் மட்டும் 969 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த வரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இன்னும் 31 ரன்கள் எடுத்தால் இரண்டு ரஞ்சி சீஸன்களிலும் 1,000 ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையைப் பெறுவார்.  

நிலையான பேட்டிங் வரிசை உள்ள அணியில் பௌலிங் சற்றே சொதப்பலாக உள்ளது. உமேஷ் யாதவ் போன்ற அனுபவ வீரர்கள் இருந்தாலும் அக்ஷய் வாக்ரேவின் பெளலிங் மட்டும்தான் அணியினருக்கு சற்று ஆறுதல். பேட்டிங்கைப் போல் பெளலிங்கும் பலமாகும் பட்சத்தில் அரையிறுதியில் கேரளாவை, வென்று தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெருமை விதர்பா அணிக்குக் கிடைக்கும். 

கேரளா: 
 கடந்த சீசன்களில் இருக்கிற இடம் தெரியாமல் இருந்த கேரள அணி, இந்த சீசனின் ஒவ்வொரு போட்டியிலும் தன் இருப்பை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. விதர்பாவின் ஆகப்பெரும் பலம் பேட்டிங் லைன் அப் என்றால், கேரளாவுக்கு பெளலிங் லைன் அப். சந்தீப் வாரியர், சக்சேனா, பசில் தம்பி ஆகிய மூவரின் பவுலிங்தான் கேரளாவின் வெற்றிக்கு முதுகெலும்பு. வெற்றி பெற்ற அனைத்துப் போட்டிகளிலும் எதிரணியை 300 ரன்களுக்குள் சுருட்டி அசால்ட் காட்டியது கேரளா. ஆனால், பேட்டிங்கில் அவர்களால் சோபிக்க முடியவில்லை. 50 ஓவர் கிரிக்கெட்டுகளில் ஆடிய ஆட்டத்தை டெஸ்ட் போட்டிகளில் ஆட திணறுகிறார் சஞ்சு சாம்சன் . ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு வீரர் அடித்ததால் கௌரவமான ஸ்கோரை எட்ட முடிந்தது. நிலையான பேட்டிங் வரிசை இல்லாததை தமிழகம், பஞ்சாபுக்கு எதிரான போட்டிகளில் பார்க்க முடிந்தது. சொற்ப ரன்களில் அனைவரும் ஆட்டமிழக்க பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் ஆட்டம் கண்டது கேரளா.

Jalaj Saxena

அரையிறுதியில் ஆட்டத்தின் போக்கை மாற்றுபவராக கேரளா வசம் இருப்பது ஜலஜ் சக்சேனா மட்டுமே. கேரளா பெளலிங்கில் கில்லியாக இருப்பது விதர்பா அணிக்கு ஒரு வகையில் கிலிதான் என்றாலும், கேரளாவின் பேட்டிங் குறையைப் போக்குபவராக இருப்பது சக்சேனா மட்டும்தான். ஆஃப் ஸ்பின்னையும் தாண்டி பேட்டிங்கிலும் அதிரடி காட்டுகிறார் ஜலஜ்‌. கடந்த நான்காண்டுகளில் மூன்றுமுறை சிறந்த ஆல் ரவுண்டருக்கான விருது, ஆந்திர அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து, 8 விக்கெட்டுகள் வீழ்த்தியது என கேரளாவின் நம்பிக்கை நட்சத்திரமாய் ஜொலிக்கிறார். பெளலிங்கைப் போலவே பேட்டிங்கிலும் கொஞ்சம் அக்கறை காட்டும் பட்சத்தில் விதர்பா அணிக்கு நெருக்கடியைத் தரலாம். மொத்தத்தில் கேரளாவின் வருகை அரையிறுதியில் விதர்பா அணிக்கு பெரும் சவாலாக இருக்கும். 
  
கர்நாடகா: 
முன்னாள் சாம்பியன் கர்நாடக அணி இந்த சீஸனில் கொஞ்சம் சொதப்பல். மனீஷ் பாண்டே, கருண் நாயர், மயங் அகர்வால் போன்ற முன்னணி பேட்ஸ்மென்கள்  இருந்தாலும் அவர்களால் நல்ல ஸ்கோரை எட்டமுடியவில்லை. கிருஷ்ண மூர்த்தி சித்தார்த், ஸ்ரேயாஸ் கோபால் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழக்க, எளிதாக வெல்லக்கூடிய ஆட்டம்கூட டிராவில் முடிகிறது அல்லது எதிரணியை வெற்றி பெறச் செய்கிறது. பலமான டாப் ஆர்டர் இருந்தாலும், ஒவ்வொரு போட்டிகளிலும் ஏதேனும் ஒரு பௌலரோ இல்லை ஆல் ரவுண்டரோதான் ரன் எடுக்கின்றனர்.

karnataka ranji team

முதல் சுற்று போட்டிகளிலேயே பல இடங்களில் தடுமாறியது கர்நாடகா. குறிப்பாக, பரோடா அணிக்கு எதிரான போட்டியில் கிட்டத்தட்ட ஐந்து வீரர்கள் டக் அவுட்டாக, பரோடா அணி எளிதாக வென்றது. முதல் சுற்று போட்டிகளில் தட்டுத்தடுமாறி ஒருவழியாக காலிறுதிக்கு வந்த கர்நாடகா, வழக்கம்போல காலிறுதியிலும் சொதப்பியது. ராஜஸ்தானுக்கு எதிரான காலிறுதியில், முதல் இன்னிங்ஸில் டாப் ஆர்டர் மொத்தமாக சரிய, வினய் குமார் நிதானமாக ஆடி 83 ரன்கள் சேர்த்து கௌரவமான ஸ்கோரை எட்ட உதவினார். இரண்டாவது இன்னிங்ஸில் கருண் நாயரும் மனீஷ் பாண்டேவும் பொறுப்பை உணர்ந்து அரைசதம் கடக்க, எளிதாக வெல்லக்கூடிய போட்டியைக் கஷ்டப்பட்டு வென்றனர். பெளலிங்கில் வினய் குமார், அபிமன்யு மிதுன் நம்பிக்கை அளிக்கின்றனர். ஆனால், பேட்டிங்தான் கர்நாடகாவின் வீக். அதைச் சரி செய்யும் பட்சத்தில் பலம் வாய்ந்த சௌராஷ்ட்ரா அணிக்கு டஃப் கொடுக்கலாம். 

சௌராஷ்ட்ரா: 
இந்த சீஸனின் ஆரம்பமே சௌராஷ்ட்ரா அணிக்கு அமர்க்களமாக அமைந்தது. முதல் போட்டியிலேயே ஹர்விக் தேசாய், ஸ்னெல் பட்டேல், ஆர்பிட் வஸ்வடா அதிரடியில் மிரட்டினர்.  அடுத்தடுத்து ஆடிய ஆட்டங்கள் அனைத்திலும் தடுமாற்றம் ஏதுமின்றி நிலையான ஆட்டத்தை சாத்தியப்படுத்தினர். எதிரணியை ஆட்டம் காண வைக்க பேட்ஸ்மென்கள் மட்டுமன்றி பெளலர்களும் ஓவர்டைம் பார்த்தனர். உனத்கட், தர்மேந்திரசிங் ஜடேஜா இருவரும் எதிரணியின் விக்கெட்டுகளைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டனர். இந்த சீஸனில் இதுவரை 45 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார் தர்மேந்திரசிங் ஜடேஜா. 

Dharmendrasinh Jadeja

உத்தரப்பிரதேசத்துக்கு எதிரான காலிறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 372 ரன்களை அசால்ட்டாக சேஸ் செய்தனர். ரஞ்சி வரலாற்றிலேயே அதிகபட்ச சேஸ் இதுதான். மேலும், ஆஸ்திரேலிய தொடருக்குப் பின் புஜாரா அணிக்கு திரும்பியிருப்பது பெரும்பலம். ஏற்கெனவே, கர்நாடக அணியுடன் முதல் சுற்றில் ஜெயித்த சௌராஷ்ட்ரா அணிக்கு, அரையிறுதிப் போட்டி அவ்வளவு கடினமாக இருக்காது.

மொத்தத்தில் இந்த ரஞ்சிக் கோப்பை புதிய வீரர்களுக்கு பயிற்சிக் களமாகவும், இந்திய கிரிக்கெட் வாரியம் சிறந்த வீரர்களைக் கண்டு கொள்ளுவும் நல்ல வாய்ப்பளித்துள்ளது.

Picture Courtesy: ESPN Cricinfo


டிரெண்டிங் @ விகடன்