‘எனது விளையாட்டை இழந்தேன்; வாழ்க்கை அர்த்தமற்றதானது!’- சான்ஜிதா சானு உருக்கம் | Indian weightlifter Sanjita Chanu provisional suspension being lifted

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (24/01/2019)

கடைசி தொடர்பு:11:45 (24/01/2019)

‘எனது விளையாட்டை இழந்தேன்; வாழ்க்கை அர்த்தமற்றதானது!’- சான்ஜிதா சானு உருக்கம்

சான்ஜிதா சானு

காமன்வெல்த்  விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு முறை தங்கப்பதக்கம் வென்ற இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சான்ஜிதா சானு ஊக்கமருத்து பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக, சர்வதேச பளுதூக்குதல் சம்மேளம் இவருக்கு இடைக்காலத்தடை விதித்தது. 2017-ம் ஆண்டு, அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியன் ஷிப் போட்டியில் கலந்துகொண்டார். இந்தப்போட்டிக்கு முன்பாக சிறுநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஊக்கமருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. இந்தச்  சோதனை முடிவுகள், கடந்தாண்டு மே மாதம் 15-ம் தேதி வெளியானது. இதில் சஞ்சிதா சானு ஊக்கமருந்து பயன்படுத்தியதாக முடிவுகள் வந்தன. இதனையடுத்து, இவருக்கு இடைக்காலத்தடை விதித்து சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் உத்தரவிட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த சஞ்சிதா, இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார். தன் மீதான தடையை நீக்க வேண்டும் என அவர் சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்திடம் முறையிட்டார்.

விளையாட்டு

இந்நிலையில், சான்ஜிதா சானு மீதான இடைக்காலத்தடை ரத்துசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, கடிதம் வாயிலாக   இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்திடம் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களாக நடைபெற்ற சஞ்சிதாவின் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது.

இதுகுறித்துப் பேசியுள்ள சான்ஜிதா சானு, “ சர்வதேச பளுதூக்குதல் சம்மேளம் இடைக்காலத்தடையை நீக்கியது மகிழ்ச்சி. எனக்கு ஆதரவாக முடிவுகள் வரும் என்பதில் நான் நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால், இந்தக் காலகட்டத்தில் நான் கடுமையான மனவேதனைக்கு ஆளானேன். நான் மிகவும் சோகமாக இருந்தேன். எனது பளுதூக்குதல் கனவு சுக்குநூறாக உடைந்ததாகக் கருதினேன். என்னுடைய  அரசுப் பணியை ராஜினாமா செய்ய முடிவுசெய்தேன். என் வாழ்க்கை அர்த்தமற்றதாக இருந்தது. நான் நிம்மதியாக உணவு உட்கொள்ள முடியவில்லை உறக்க முடியவில்லை. இந்தக் காலகட்டத்தில் எனது குடும்பத்தினர் உறுதுணையாக இருந்தனர். நான் கடினமான முடிவுகளை எடுத்துவிடாமல் தடுத்தனர்.

பளுதூக்குதல்

தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துகளைப் பயன்படுத்தாத ஒரு விளையாட்டு வீரர் மீது குற்றச்சாட்டு சுமத்துவது என்பது மிகவும் வேதனையானது. நான் ஒரு அப்பாவி என்பதை இப்போது நிரூபித்துள்ளேன். தடைநீக்கம் குறித்த தகவலை முதலில் எனது உறவினர்தான் என்னிடம் தெரிவித்தார். நள்ளிரவில் போன் செய்தார். அவர் ஏதோ மாற்றி அழைத்திருக்கக்கூடும் என நான் போனை எடுக்கவில்லை. ஆனால், திரும்பத் திரும்ப எனது போன் சத்தமிட்டது. பின்னர்தான் எடுத்துப் பேசினேன். அவர், எனக்கு அந்த மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தார், நான் மீண்டும் புதிதாகப் பிறந்ததைப் போன்று உணர்ந்தேன்.

நான் இன்னும் இந்திய அணியின் பயிற்சியாளர் விஜய் சர்மாவைத் தொடர்புகொண்டு பேசவில்லை. இந்திய பளுதூக்குதல் சம்மேளனத்திடம் இருந்து அழைப்பு வரும் எனக் காத்திருக்கிறேன். தேசிய பயிற்சிக் கூடத்தில் மீண்டும் இணைய ஆர்வமாக உள்ளேன். ஒலிம்பிக்ஸ் மற்றும் ஆசியவிளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க கடுமையாக உழைக்க வேண்டும். நான் ஒரு போராளி. அதனால் கடுமையாக உழைத்தாக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.