தோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக் | No.4 slot suits M.S.Dhoni Says Suresh raina

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (24/01/2019)

கடைசி தொடர்பு:14:50 (24/01/2019)

தோனி - கோலி கூட்டணி அமைத்தால் மாஸ் காட்டுவார்கள் - ரெய்னா ஓபன் டாக்

தோனி

ஆஸ்திரேலியா தொடரின் மூலம் தனது கர்ஜனையைத் தொடங்கியுள்ளார் தோனி. ஸ்டெம்புக்குப் பின்னால் அவர்தான் `கில்லி’. எவ்வளவு பெரிய பேட்ஸ்மேனாக இருந்தால் கீரிஸிலிருந்து காலை நகர்த்தச் சற்று யோசித்துத்தான் ஆக வேண்டும். ஸ்டெம்புக்குப் பின்னாலிருந்து பேட்ஸ்மேன்களை தொடர்ந்து கழுகு போல் கண்காணிக்கும் தோனி சரியான நேரத்தில் கதையை முடித்துவிடுவார். உலகக்கோப்பை தொடரில் தோனியின் அனுபவம் இந்திய அணிக்குப் பெரிய ப்ளஸ் என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த 2018-ல் பேட்டிங் இவருக்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்தது. கடந்தாண்டில் 20 போட்டிகளில் விளையாடி 275 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அவரால் முன்புபோல ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்க முடியவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தது. 

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி-20 தொடர்களிலிருந்து அதிரடியாகக் கழற்றிவிடப்பட்டார். இந்தமுடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. ஆனால் தேர்வுக்குழுவினர் இளம்வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் நோக்கில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். தோனி தரப்பிலிருந்து எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. அமைதியாகவே நாள்களை கடந்தார். தனது குடும்பத்தினருடன் நாள்களை செலவிட்டார். 

கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தோனி அழைக்கப்பட்டார். முதல் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் விரைவிலே ஆட்டமிழந்ததால் இவர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் கடந்து அவுட் ஆனார். இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. தோனியின் ஸ்லோ இன்னிங்ஸ்தான் வெற்றியைப் பறித்ததாக விமர்சனங்கள் எழுந்தன. அடுத்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். இரண்டாவது போட்டியில் சிக்ஸர் அடித்து ரசிகர்களைப் பரவசப்படுத்தினார். இந்தத்தொடரில் மூன்று அரைசதம் அடித்த தோனி ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

இந்தியா

இதுகுறித்து பேசியுள்ள சுரேஷ் ரெய்னா, ``தோனி தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் எப்போதும் ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கக்கூடியவர். ஆனால் அவர் இன்னும் முன்கூட்டியே களமிறங்கினால் இன்னும் சிறப்பானதாக இருக்கும். விராட் கோலியுடன் மிடில் ஆர்டரில் இறங்கி விளையாடும் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். தோனி எப்போதும் பாசிட்டிவாக சிந்திக்கக்கூடியவர். அவர் 4-வது இடத்தில் களமிறங்கினால் களத்தில் சிறிது நேரம் பந்துகளை கணித்துவிட்டு அதிரடியாக விளையாட முடியும். உலகக்கோப்பைப் போட்டிகளில் அவர் 4-வது இடத்தில் இறங்குவதுதான் சரியானதாக இருக்கும். என ரெய்னா கூறியுள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரோஹித் ஷர்மா கூறிய அதே கருத்தை தற்போது ரெய்னா தெரிவித்துள்ளார்.