ஸ்மிரிதி சதம்... நியூசிலாந்தை வென்ற இந்தியன் கேர்ள்ஸ்..! #NZvIND | Indian Women's Cricket team wins big against NewZealand in the first ODI

வெளியிடப்பட்ட நேரம்: 18:17 (24/01/2019)

கடைசி தொடர்பு:18:18 (24/01/2019)

ஸ்மிரிதி சதம்... நியூசிலாந்தை வென்ற இந்தியன் கேர்ள்ஸ்..! #NZvIND

அதே மைதானம், அதே வெற்றி. ஆனால், இன்றைய போட்டியில் நியூசிலாந்தைப் பதம்பார்த்தது, இந்திய மகளிர் அணி!

ஸ்மிரிதி சதம்... நியூசிலாந்தை வென்ற இந்தியன் கேர்ள்ஸ்..! #NZvIND

10 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து மண்ணில் ஒரு நாள் போட்டியை வென்ற இந்திய அணிக்கு போனஸாக மற்றுமொரு வெற்றி. அதே இடம், அதே மைதானம், அதே வெற்றி. ஆனால், இன்றைய போட்டியில் நியூசிலாந்தைப் பதம்பார்த்தது, இந்திய மகளிர் அணி! #NZvIND

2018 டி-20 உலகக் கோப்பை அரை இறுதி வரை முன்னேறிய இந்திய மகளிர் அணி, சாம்பியனாகும் வாய்ப்பை நழுவவிட்டது. மிதாலி vs பொவார், மகளிர் அணி பயிற்சியாளராக டபிள்யூ.வி ராமன் நியமனம் எனத் தொடர்ந்து செய்திகளில் அடிப்பட்டு வந்தது இந்திய மகளிர் அணி. கடந்த இரண்டு மாதங்களாகப் புயலாய் வீசிய பிரச்னைகளை ஓரங்கட்டி வைத்து, நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை அசத்தலான வெற்றியுடன் தொடங்கியுள்ளனர் இந்தியன் கேர்ள்ஸ். 

#NZvIND

நியூசிலாந்து நேப்பியர் மெக்ளீன் பார்க் மைதானத்தில் தொடங்கிய முதல் ஒரு நாள் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. சூசி பேட்ஸ், சோஃபி டிவைன் சிறப்பான ஓப்பனிங் கொடுக்க, 60 ரன்களுக்கு விக்கெட் ஏதும் இல்லாமல் களத்தில் இருந்தது நியூசிலாந்து அணி. 13-வது ஓவரில், பூனம் யாதவ் பந்தில் சிங்கிள் ஓட முயன்றார் சோஃபி டிவைன். மிட் ஆஃபில் இருந்த தீப்தி ஷர்மா ஷார்ப் த்ரோ செய்ய, பேட்ஸ் - டிவைன் பார்ட்னர்ஷிப் முடிவுக்கு வந்தது. 28 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார் சோஃபி டிவைன். 

பூனம் யாதவின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து மிடில் ஆர்டர், மடமடவென விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. லாரன் டவுன் (0), சாத்தர்வெயிட் (31), கேர் (28) என விக்கெட்டுகள் சரிந்தன. 60/0 என்றிருந்த நியூசிலாந்து 136/5 எனத் தடுமாறியது. ஐசிசி-யின் 2018-ம் ஆண்டுக்கான டி-20, ஒரு நாள் என இரு அணிகளிலும் தேர்வு செய்யப்பட்டது சரி என்பதை நிரூபித்து வருகிறார் பூனம் யாதவ். தொடர்ந்து பெளலிங்கில் கன்சிஸ்டன்டாக விளையாடி வரும் பூனம் யாதவ், இந்திய அணியில் தவிர்க்க முடியாத இடத்தைப் பதிவு செய்துவிட்டார். 

#NZvIND

மிடில் ஆர்டருக்கு பூனம் யாதவ், லோயர் ஆர்டருக்கு எக்தா பிஷ்ட் எனப் பிரித்து வைத்து ஆளுக்கு தலா 3 விக்கெட்டுகளை அள்ளினர். தீப்தி ஷர்மா தன் பங்குக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த, சிகா பாண்டே ஒரு விக்கெட் எடுத்தார். சிறப்பான பந்துவீச்சுக்கு இந்திய அணியினரின் ஃபீல்டிங் கைகொடுத்தது. ஷார்ப் த்ரோ, கேட்சுகள், ஸ்பின் மாயாஜாலம் என ஆல்-ரவுண்டர் பெர்மான்ஸை கொடுத்த இந்திய அணி, 192 ரன்களுக்கு கிவிகளை ஆல்-அவுட்டாக்கியது.

193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, ஜெமிமா - ஸ்மிரிதி மந்தானா கூட்டணி அதிரடி ஓப்பனிங் கொடுத்தது. 190 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் சேர்ந்த இந்த ஜோடி, பேட்டிங்கில் கலக்கியது. டி-20, ஒரு நாள் போட்டிகளில் ஸ்மிரிதியுடன் ஓப்பனிங் இறங்கச் சரியான வீராங்கனை யார் என்பது உறுதியாகாமலேயே உள்ளது. சுலபமான இலக்கை சேஸ் செய்வதால், அழுத்தம் குறைந்த போட்டியில் ஜெமிமாவை ஓப்பனிங் இறக்க முயற்சி செய்ததற்கு பலன் கிடைத்துள்ளது. 3 சிக்சர்கள், 9 பவுண்டரிகள் எனத் தூள் கிளப்பிய மந்தானா, ஒரு நாள் அரங்கில் தனது நான்காவது சதத்தை நிறைவு செய்தார். ஸ்மிரிதி ஒரு பக்கம் விளாச, மறுபுறம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெமிமா 81* ரன்கள் எடுத்தார். 

#IndVsNz

அதிரடியாக விளையாடுவது ஸ்மிருதிக்குப் புதிதல்ல என்றாலும், இந்த சீசன் பிக் பேஷ் தொடரில் சோபிக்காத அவருக்கு 2019-ம் ஆண்டின் சர்வதேச ஒரு நாள் போட்டியை அதிரடியாகத் தொடங்கியுள்ளது செம. ஓப்பனர் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திய ஜெமிமா, இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் பட்டியலில் இடம்பெற முன்பதிவு செய்துவிட்டார். 32.2 ஓவர்களில், 190 ரன்களை இந்திய அணி எட்டிய போது, கேர் பந்துவீச்சில் ஸ்மிரிதி (105) ஆட்டமிழந்தார். 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்க வேண்டிய இந்திய அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது.

2021 மகளிருக்கான ஐசிசி சாம்பியன்ஷிப் தொடர் நியூசிலாந்தில் நடைபெற உள்ளது. மகளிருக்கான சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் போட்டியிடும் 8 அணிகள், இதற்கான தேர்ச்சியில் போட்டியிடுகின்றன. முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகளும் நியூசிலாந்து அணியும் ஐசிசி சாம்பியன்ஷிப் தொடருக்குத் தகுதி பெறும். ஐசிசி சாம்பியன்ஷிப் தொடரை நடத்துவது நியூசிலாந்து அணி என்பதால், கிவி அணிக்கு அழுத்தம் குறைவு. புள்ளிகள் கணக்கிடுவதால், ஒவ்வொரு போட்டியும் முக்கியம் என்பதை மனதில் கொண்டு, முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய மகளிர் அணி. கமான் கேர்ள்ஸ்..!


டிரெண்டிங் @ விகடன்