``என்னை கருணையுடன் மன்னித்தார்கள் இருவரும்...” கரண் ஜோஹர் நெகிழ்ச்சி | Karan johar shares rahul and pandya's words about his apology

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (26/01/2019)

கடைசி தொடர்பு:11:50 (26/01/2019)

``என்னை கருணையுடன் மன்னித்தார்கள் இருவரும்...” கரண் ஜோஹர் நெகிழ்ச்சி

இந்திய கிரிக்கெட்டின் இளம் சென்ஷேஷனாக இருப்பவர்கள், கே.எல்.ராகுலும் ஹர்திக் பாண்ட்யாவும். இருவரும் பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் நடத்தும் ’காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது பாண்ட்யா பேசிய சில வார்த்தைகள், பெண்களை அவமதித்ததாகச் சர்ச்சை வெடித்தது. 

கே.எல்.ராகுல்

ராகுல், விராட் கோலியைக் குறிப்பிட்டு ‘எப்போதும் வேலை வேலை என்று இருந்தால் எப்படி?’ என்று விளையாட்டாகக் கேட்டதும் வினையானது. ``இருவரும் இந்திய கிரிக்கெட்டின் மாண்பை கெடுத்திருக்கிறார்கள்” என்று கண்டனங்கள் வலுத்தன. இருவரையும் அணியில் இருந்து இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தது பி.சி.சி.ஐ. இதனால், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இருந்து இருவரும் இந்தியாவுக்குத் திரும்ப அழைக்கப்பட்டனர். `இது மிகப்பெரிய தண்டனை. அவர்கள் மன்னிப்பு கேட்டுவிட்டார்கள். மன்னிப்பதே சரி’ என்று, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, பாண்ட்யாவுக்கும் ராகுலுக்கும் விதித்த தடையை, விலக்கிக் கொண்டது பி.சி.சி.ஐ. இருவரும் இந்திய அணிக்குத் திரும்பியுள்ளனர். 

விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கரண் ஜோஹர், ``இதற்கெல்லாம் நானே காரணம்” என்று, சில நாள்கள் கழித்து மனம் திறந்தார். ``நான் எப்போதுமே நிகழ்ச்சியை கலகலப்பாக நடத்திச்செல்ல நினைப்பேன். அன்றும் அப்படியே நடத்திச் சென்றேன். ஆனால், அபாரமான இரண்டு கிரிக்கெட் வீரர்களின் எதிர்காலத்தை அது பாதித்துவிட்டது. சில நாள்களாக மிகுந்த குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன்” என்று பேசினார். 

இப்போது, இன்னும் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். “இப்படியெல்லாம் நடக்குமென்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்தப் பதில்களை அவர்கள் சொல்லும்போது, இந்த அளவுக்குப் பிரச்னையாகும் என்று தெரியாது. விவகாரம் பெரிதானதும், `என்னை மன்னித்து விடுங்கள்’ என்று ராகுலிடமும் பாண்ட்யாவிடமும் சொன்னேன். அவர்கள், `உங்களின் தவறென்று எதுவுமில்லை கரண்’ என்று கருணையுடன் நடந்துகொண்டார்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி’’ என்று தெரிவித்துள்ளார். 

கரண் ஜோஹர்

தொடர்ந்து, “இந்த விவகாரத்தால் நான் ஒரு பெண்ணைக் காயப்படுத்தியிருக்கிறேன் என்றால், அது என் அம்மாதான். ‘நீ அவர்களுக்கு இப்படிச் செய்திருக்கக் கூடாது’ என்று அவர் கடிந்துகொண்டார். ‘நான் எதுவும் செய்யவில்லை’ என்று எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவர் ஏற்கவில்லை. அவர் பாண்ட்யாவின் தீவிர ரசிகை” என்று கூறியுள்ளார். 

மேலும், “இருவரின் மீதும் கொஞ்சம் அதிகமாகவே கோபப்பட்டுவிட்டோம். அதற்குரிய தண்டனையையும் அவர்களுக்கு வழங்கிவிட்டோம். இனிமேலாவது, அவர்களை கிரிக்கெட் விளையாட விடுவோம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.