குல்தீப் சுழலில் சிக்கிய நியூசிலாந்து - 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! | India Win the second odi by 90 runs. 2-0

வெளியிடப்பட்ட நேரம்: 15:02 (26/01/2019)

கடைசி தொடர்பு:15:16 (26/01/2019)

குல்தீப் சுழலில் சிக்கிய நியூசிலாந்து - 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

இந்தியா

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. இந்திய அணிக்கு ரோகித் ஷர்மா, தவான் சிறப்பான தொடக்கம் அளித்தனர். நியூசிலாந்து பந்துவீச்சை இருவரும் துவம்சம் செய்தனர். இவர்களது அதிரடியால் இந்தியாவின் ரன் ரேட் உயர்ந்தே காணப்பட்டது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த இந்த இணையை டிரென்ட் பவுல்ட் பிரித்தார். இவரது பந்துவீச்சில் தவான் 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச்- ஆகி வெளியேறினார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ரோகித் ஷர்மா நியூசிலாந்து அணிக்கு எதிராக சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  87 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து களமிறங்கிய கோலி - அம்பாத்தி ராயுடு இணை மேற்கொண்டு தொடர்ந்து ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.

தவான்

விராட்கோலி 43, ரன்களில் வெளியேற அடுத்து தோனி களமிறங்கினார். முதலில் நிதானமாக ஆடிய தோனி சிறிது நேரத்தில் அதிரடியில் களமிறங்கினார். இவருக்கு கேதர் ஜாதவ் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்தத் தொடரில், விராட் கோலியை ரன் எடுக்கவிடாமல் கட்டுப்படுத்துவேன் எனக் கூறிய பெர்குசன் ஓவரை, இவர்கள் கிழித்துதொங்கவிட்டனர். அவரது ஒரு ஓவரில் மட்டும் 21 ரன்களை திரட்டினர். இன்றைய போட்டியில் 10 ஒவரை வீசிய பெர்குசன் 81 ரன்களை விட்டுக்கொடுத்தார். 50 ஓவர் முடிவில் இந்திய 4 விக்கெட் இழப்பு 324 ரன்கள் எடுத்தது. தோனி 48 ரன்களுடனும், கேதர் ஜாதவ் 22 ரன்களுடனும் விக்கெட் இழக்காமல் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் பவுல்ட், பெர்குசன் தலா விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

நியூசிலாந்து

பின்னர், 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்திலை புவனேஷ்வர் குமார் விரைவிலே வெளியேற்றினார். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்ஸன் வழக்கத்துக்கு மாறாக அதிரடியில் களமிறங்கினார். ஷமியின் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டு மிரட்டினார். இதனால் இந்திய வீரர்கள் சற்று களக்கமடைந்தனர். ஆனால், அடுத்த பந்திலே ஷமி அவரது விக்கெட்டை வீழ்த்தினார். சுழற்பந்துவீச்சாளர்கள் மேலும் நெருக்கடி கொடுத்தனர். 

கிரிக்கெட்

இந்தப் போட்டியில் தோனி தனது மின்னல் வேக ஸ்டெம்பிங் மூலம் ராஸ்டெய்லரை ஆட்டமிழக்கச் செய்தார். குல்தீப் யாதவின் மாயஜால சுழலில் நீயூசிலாந்து வீரர்கள் விக்கெட்டுகளை இழந்தனர். 24 ஓவர்களில் அந்த அணி 136 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. இந்திய அணியின் கை ஓங்க ஆரம்பித்தது. முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்ப டெய்ல் எண்டர்கள் அணியை மீட்கும் முயற்சியில் இறங்கினர். சிறப்பாக விளையாடிய ப்ரேஸ்வெல் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 40 ஓவர்களில் 234 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப்போட்டியில் குல்தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலைப்பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தின் போது இந்திய ஸ்பின்னர்கள் சஹால், கேதர் ஜாதவ், குல்தீப் யாதவ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து மொத்தம் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரோஹித் ஷர்மா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.


[X] Close

[X] Close