`இளம் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக மாற வேண்டும்!’ - பாண்ட்யா, ராகுலுக்கு டிராவிட்டின் அறிவுரை | Hardik Pandya, KL Rahul can still be ‘role models’, says Rahul Dravid

வெளியிடப்பட்ட நேரம்: 21:17 (26/01/2019)

கடைசி தொடர்பு:21:17 (26/01/2019)

`இளம் வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக மாற வேண்டும்!’ - பாண்ட்யா, ராகுலுக்கு டிராவிட்டின் அறிவுரை

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் மீதான தடையை நீக்கியுள்ளது பி.சி.சி.ஐ. தடை நீக்கப்பட்டுதுடன், நியூசிலாந்து தொடருக்கு இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பாண்ட்யா - ராகுல்

அவர்கள் விரைவில் அணியுடன் இணையவுள்ளார்கள். இந்தநிலையில், இந்த விவகாரத்தில் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து cricinfo இணையதளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ``அவர்கள் மீதான சஸ்பென்ஷன் நீக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைகிறேன். இளம் வயதிலேயே பணம், புகழ் கிடைத்ததால் அவ்வாறு பேசியுள்ளனர் என்பது மட்டும் இதற்கான காரணம் இல்லை. இவற்றை எல்லாம் தாண்டி பெற்றோர்களின் வளர்ப்பும், கவனிப்பும் இதற்குக் காரணம் தான். இந்த மாதிரியான குணங்கள் இளம் வயதிலேயே வரக்கூடியது இயல்புதான். பணக்காரர்கள் வீட்டில்தான் இப்படி நடக்கும் என்பதில்லை. 

பாண்ட்யா - ராகுல்

பணக்காரர் வீடாக இருந்தாலும் சரி, ஏழை வீடாக இருந்தாலும் சரி பிள்ளைகளுக்கு அதிக செல்லம், அதிக உரிமை அளிக்கப்படும்போது அவர்களும் அதிக உரிமை எடுத்துக்கொள்வார்கள். இளம்வயதில் அதிகமான செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்ட குழந்தைகள் இதைக் கண்டிப்பாக உணர்ந்திருப்பார்கள். அதேபோல ஒரு வீரருக்கு அதிகமான உரிமை அளிக்கப்பட்டாலும் இதே பிரச்னை வரும். தேசிய  விளையாட்டு அகாடமியில் உள்ள ஏராளமான பயிற்சியாளர்கள் என்னிடம் அடிக்கடி சொல்வது என்னவென்றால், ``பேட்டிங், பௌலிங்கில் சிறப்பாக இருப்பவர்கள் எல்லாம் மோசமாக பீல்டிங்கில் சொதப்பலாக இருக்கிறார்கள், அல்லது விக்கெட்டுகளுக்கு இடையே விரைவாக ஓட முடியாதவர்களாக இருக்கிறார்கள்" என்பதுதான். 

டிராவிட்

ஒரு வீரரைச் சரியாக உருவாக்குவதில் பயிற்சியாளர்களுக்கு பங்கு இருப்பதைப் போல பிள்ளைகளைச் சரியாக வளர்ப்பதில் பெற்றோர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இளம் வயது பிள்ளைகளை கட்டமைப்பது அவர்களது பெற்றோர்கள் தான். பிள்ளைகளின் தவறுகளையும், ஏமாற்றுதல்களையும் நாம் ஏற்றுக்கொள்ளத் தொடங்கினால் அது கண்டிப்பாக பிரச்னையை உருவாக்கும். அவர்களின் தவற்றை சரியானது கிடையாது என்பதை அவர்களுக்கு உணரச் செய்ய வேண்டும். தவறு நடப்பது இயல்புதான் என்றாலும், அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளப் பழகிக்கொள்ள வேண்டும். பாண்ட்யாவும்,  கே.எல்.ராகுலும் இந்த கடினமான சூழ்நிலையைப் பாடமாக எடுத்துக்கொண்டு திருந்தி இளம்வீரர்களுக்கு எடுத்துக்காட்டாக மாற வேண்டும்" என்று அறிவுரை கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க