`தோனி சொன்ன திசையில் கண்ணை மூடிக்கொண்டு பந்துவீசுவேன்!’ - சக்ஸஸ் சீக்ரெட் பகிரும் கேதர் ஜாதவ் | Indian team member kedar Jadav speaks about Dhoni's guidance

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (26/01/2019)

கடைசி தொடர்பு:22:00 (26/01/2019)

`தோனி சொன்ன திசையில் கண்ணை மூடிக்கொண்டு பந்துவீசுவேன்!’ - சக்ஸஸ் சீக்ரெட் பகிரும் கேதர் ஜாதவ்

ஒரு கிரிக்கெட் வீரராகத் தான் உருவெடுத்ததில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு முக்கியமான பங்கிருப்பதாக கேதர் ஜாதவ் தெரிவித்திருக்கிறார். 

தோனி - கேதர் ஜாதவ்

நியூசிலாந்து தொடரில் இரு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய கேதர் ஜாதவ் இரண்டாவது ஒருநாள் போட்டியில் 22 ரன்கள் குவித்து இந்திய அணி, 324 ரன்கள் குவிக்கக் காரணமாக இருந்தார். அதேபோல், தோனியுடன் ஐந்தாவது விக்கெட்டுக்கு இணைந்து 54 ரன்கள் எடுத்தார். இரண்டாவது போட்டியில் 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

போட்டி குறித்து பேசிய கேதர் ஜாதவ், ``இதுபோன்ற ஒரு கிரிக்கெட் வீரராக நான் உருமாற முக்கியமான காரணம் தோனிதான். எப்போதுமே அவர் எனக்கு ஊக்கம் அளித்தே வந்திருக்கிறார். ஜிம்பாப்வே தொடர் மற்றும் கடந்த 2016ம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் என் மீது நம்பிக்கை வைத்தார். அந்தத் தொடரில் என்னை 2 ஓவர்கள் பந்துவீச அவர் அழைத்தார். அதிர்ஷ்டவசமாக நான் வீசிய இரண்டாவது ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். அன்று முதல் இன்று வரை சீனியர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா உள்ளிட்டோர் எனக்கு ஊக்கம் அளித்து வருகிறார்கள். பார்ட் டைம் பந்துவீச்சாளருக்கு இருக்கக் கூடிய நெருக்கடி எனக்கில்லாமல் அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார்கள். 

கேதர் ஜாதவ்

சரியான சமயத்தில் பந்துவீச என்னை அழைத்ததற்காக விராட் கோலிக்கும் தோனிக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த காலங்களிலும் நான் இதைச் சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு முறை பந்துவீசும்போது நான் தோனியைப் பார்ப்பேன், `நீ இந்தப் பகுதியில் பந்துவீசு... அந்தப் பகுதியில் பந்துவீசு’ என அவர் எனக்கு வழிகாட்டுவார். நான் கண்ணை மூடிக்கொண்டு அவர் சொன்னபடி பந்துவீசி விக்கெட் வீழ்த்துவேன்.

இந்திய அணியின் முக்கிய சுழற்பந்துவீச்சாளராக வேண்டும் என்பது குறித்து சிந்திக்கவில்லை. பேட்டிங்கில்தான் எனது முழு கவனமும் இருக்கிறது. அதிக ரன்கள் விட்டுக்கொடுக்காத பார்ட் டைம் பந்துவீச்சாளராக இருக்கவே நான் முயற்சி செய்கிறேன். குறிப்பாக பவுண்டரிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பந்துவீசு என்ற நம்பிக்கையுடன் என்னைப் பந்துவீச அழைக்கும் என்னுடைய கேப்டனின் நம்பிக்கையைக் காப்பாற்றப் பந்துவீசுகிறேன். விக்கெட் வீழ்ந்தால் அது போனஸ்தான். பெரும்பாலான நேரங்களில் பார்ட் டைம் பந்துவீச்சாளர்களை பேட்ஸ்மேன்கள் குறைத்து மதிப்பிட்டு விடுகிறார்கள். அதுபோன்ற சமயங்களில் எளிதாக அவர்கள் விக்கெட்டை வீழ்த்திவிடலாம்’’என்றார். 

தோனி

நியூசிலாந்துக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஹென்றி நிக்கோலஸ் விக்கெட்டை வீழ்த்திய கேதர் ஜாதவ், இரண்டாவது போட்டியில் ராஸ் டெய்லரின் விக்கெட்டை எடுத்தார். இதுவரை 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கேதர் ஜாதவ், 24 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அவரது எகானமி ரேட் ஓவருக்கு 4.95 என்பது குறிப்பிடத்தக்கது.