இனவெறி கருத்து சர்ச்சை! - பாகிஸ்தான் கேப்டனுக்கு 4 போட்டிகளில் விளையாடத் தடை | ICC suspends Pakistan Captain Sarfraz Ahmed to 4-Match Suspension For Racist Remark

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (27/01/2019)

கடைசி தொடர்பு:09:32 (28/01/2019)

இனவெறி கருத்து சர்ச்சை! - பாகிஸ்தான் கேப்டனுக்கு 4 போட்டிகளில் விளையாடத் தடை

தென்னாப்பிரிக்க வீரருக்கு எதிராக இனவெறி கருத்துகளைத் தெரிவித்த புகாரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது மீது சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுத்திருக்கிறது. 

சர்ஃப்ராஸ் அகமது

டர்பன் மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அந்த அணியின் வீரர் அண்டில் பெஹ்லுக்வாயோவை நோக்கி பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது நிறவெறியைத் தூண்டும் விதமாகக் கருத்துத் தெரிவித்திருந்தார். அவர் பேசியது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாகப் பதிவாகியிருந்தது. இதுகுறித்து போட்டி ரெஃப்ரி ரஞ்சன் மடுகலே, ஐ.சி.சி ஒழுங்குமுறைக் கமிட்டியிடம் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அண்டில் பெஹ்லுக்வாயோவை நேரில் சந்தித்து சர்ஃப்ராஸ் அகமது மன்னிப்புக் கோரினார். இந்த விவகாரத்தில் தன் மீது தவறு இருப்பதாகவும் அவர் ஒப்புக்கொண்டிருந்தார். சமூக வலைதளத்திலும் பாகிஸ்தான் கேப்டனுக்குக் கண்டனம் தெரிவித்து கிரிக்கெட் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வந்தனர். 

சர்ஃப்ராஸ் அகமது ட்விட்டர் பதிவு

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய ஐ.சி.சி, பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது 4 போட்டிகளில் விளையாடத் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது. இனவெறியைத் தூண்டும் விதமாகப் பேசிய குற்றச்சாட்டில் அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், நடத்தை குறித்த பயிற்சி வகுப்புக்கு அவர் செல்ல வேண்டும் என்று ஐ.சி.சி நிபந்தனை விதித்திருக்கிறது. அந்தப் பயிற்சி வகுப்பில் சர்ஃபாஸ் கலந்துகொள்வது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஐ.சி.சி ஆலோசித்து முடிவெடுக்கும் என்று தெரிகிறது. இதனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளில் சர்ஃப்ராஸ் கலந்துகொள்ள முடியாது.