`1975-ல் அறிமுகம்; 51 ஆண்டுகள் கிளப் கிரிக்கெட்!’ - 68 வயதில் ஓய்வை அறிவித்த நியூஸிலாந்து பௌலர் | NZ former bowler Ewen chatfield announce retirement from all forms of cricket at 68

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (27/01/2019)

கடைசி தொடர்பு:09:47 (28/01/2019)

`1975-ல் அறிமுகம்; 51 ஆண்டுகள் கிளப் கிரிக்கெட்!’ - 68 வயதில் ஓய்வை அறிவித்த நியூஸிலாந்து பௌலர்

நியூஸிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் இவன் சாட்ஃபீல்ட், அனைத்து விதமாக கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாகத் தனது 68 வது வயதில் அறிவித்திருக்கிறார்.

இவான் சாட்ஃபீல்ட்

Photo Credit: Twitter/@AaronKlee

நியூஸிலாந்தின் இவான் சாட்ஃபீல்ட், 1975-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டி மூலம் சர்வதேசக் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். தனது அறிமுகப் போட்டியில் பேட்டிங் செய்யக் களமிறங்கியபோது இங்கிலாந்தின் பீட்டர் லிவர் வீசிய பவுன்சர் தாக்கி, மைதானத்தில் சுருண்டு விழுந்தார். அவரது இதயத்துடிப்பு நின்றுபோனதாகச் சொல்கிறார்கள். அப்போது சமயோசிதமாகச் செயல்பட்ட இங்கிலாந்து பிசியோதெரபிஸ்ட் பெர்னார்ட் தாமஸின் உடனடி முதலுதவியால் அவர் உயிர்பிழைத்தார். பின்னர், அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளித்த பின்னர், அவருக்கு நினைவு திரும்பியது. 

நியூஸிலாந்து அணிக்காக இதுவரை 43 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சாட்ஃபீல்ட், 2.29 எகானமி ரேட்டுடன் 123 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். நியூஸிலாந்து அணியின் புகழ்பெற்ற பந்துவீச்சாளரான ரிச்சர்ட் ஹேட்லியின் பாட்னராக டெஸ்ட் போட்டிகளில் கோலோச்சிய சாட்ஃபீல்ட், 1989-ல் நடைபெற்ற பாகிஸ்தான் தொடருடன் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். பின்னர், வெலிங்டனில் உள்ள நியானே ஓல்டு பாய்ஸ் கிரிக்கெட் கிளப் (Naenae Old Boys Cricket Club) அணிக்காகத் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் அவர் பங்கேற்று வந்தார். தனது அணிக்காக நேற்று கடைசிப் போட்டியில் களமிறங்கிய சாட்ஃபீல்ட், முதல் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். நியானே கிளப் அணிக்காகத் தனது 17 வயதில் அறிமுகமான சாட்ஃபீல்டு, 51 ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடியிருக்கிறார்.

இவான் சாட்ஃபீல்ட்

Photo Credit: Stuff.co.nz

போட்டிக்குப் பின்னர் பேசிய அவர், `இது சிறுபிள்ளைத்தனமாக இருக்கலாம். எனக்கென்று தர நிலைகள் இருக்கின்றன. இந்த 68 வயதிலும் அந்த தர நிலையில் என்னால் விளையாட முடியவில்லை என்றால், ஓய்வுபெற இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன்’ என்று நெகிழ்ந்திருக்கிறார். இதன்மூலம் நீண்டகாலம் கிரிக்கெட் விளையாடிய வீரர்கள் வரிசையில் அவர் இணைந்திருக்கிறார். இங்கிலாந்தில் வில்ஃபிரெட் ரோட்ஸ், தனது 52 வது வயதுவரை சர்வதேசப் போட்டிகளில் விளையாடினார். 1963-ல் நடைபெற்ற கண்காட்சிப் போட்டியில் மகாராஷ்ட்ரா முதல்வர் லெவன் அணிக்கெதிரான போட்டியில் களமிறங்கியபோது இந்திய அணியின் முன்னாள் வீரர் சி.கே.நாயுடுவுக்கு வயது 69. அதேபோல்,1950-ல் காமன்வெல்த் லெவன் அணிக்கெதிரான போட்டியில் பாம்பே கவர்னர் லெவன் அணிக்காக முதல்தரக் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான ராஜா மகாராஜ் சிங்கின் வயது 75.