`சோதனையில் பங்கேற்கவில்லை' - அம்பதி ராயுடு பௌலிங்கிற்குத் தடை விதித்த ஐசிசி | Ambati Rayudu suspended from bowling in international cricket

வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (28/01/2019)

கடைசி தொடர்பு:15:35 (28/01/2019)

`சோதனையில் பங்கேற்கவில்லை' - அம்பதி ராயுடு பௌலிங்கிற்குத் தடை விதித்த ஐசிசி

இந்திய அணி வீரர் அம்பதி ராயுடு பந்துவீசத் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. 

அம்பதி ராயுடு

இந்திய அணியின் பேட்ஸ்மேன், அம்பதி ராயுடு. இவர், ஆஸ்திரேலிய தொடரின்போது முதல் ஒருநாள் போட்டியில் இரண்டு ஓவர்கள் பந்துவீசினார். இரண்டு ஓவர்கள் பந்துவீசி 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஆனால், விக்கெட்டுகள் ஏதும் விழவில்லை.  ஆனால் அவரது பந்துவீச்சு, விதிகளுக்கு மாறாக இருப்பதாகப் போட்டி நடுவர்கள் புகார் தெரிவித்தனர். புகார் தொடர்பான அறிக்கையையும் இந்திய கிரிக்கெட் போர்டிடமும், ஐசிசி-யிடமும் ஒப்படைத்தனர். 

ஐ.சி.சி

இதையடுத்து, அவரின் பந்துவீச்சு குறித்து ஆய்வு மேற்கொள்ள ஐசிசி உத்தரவிட்டது. மேலும், ``அடுத்த 14 நாள்களுக்குள் அம்பதி ராயுடு பந்துவீசும் சோதனைக்குத் தன்னை உட்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த 14 நாள்களில் எந்தவிதமான போட்டியிலும் ராயுடு பந்துவீசுவதற்கு எந்தத் தடையும் இல்லை. ராயுடுவின் பரிசோதனை ஆய்வுகள் கிடைக்கும்வரை அவர் பந்துவீசவதற்குத் தடையில்லை" என்றும் கூறியது. 

ராயுடு

photo credit: @SirJadeja

ஆனால், ஐசிசி கூறிய 14 நாள்கள் முடிந்துள்ள நிலையில், இன்று வரை அம்பதி ராயுடு பந்துவீச்சு சோதனையில் ஈடுபடவில்லை. இதனால் இனி சர்வதேசப் போட்டிகளில் அம்பதி ராயுடு பந்துவீசக் கூடாது என ஐ.சி.சி தடை விதித்துள்ளது. அதேநேரம், உள்ளூர் போட்டிகளில் எந்தத் தடையும் இல்லை. 46 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ராயுடு, இதுவரை 20.1 ஓவர்கள் பந்துவீசி, 3 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க