``இந்திய அணியின் முன்பு மற்ற எந்த அணியாலும் நிற்க முடியாது!” -ஹர்பஜன் சிங் பெருமிதம் | Harbhajan singh talks about current Indian team

வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (30/01/2019)

கடைசி தொடர்பு:11:00 (30/01/2019)

``இந்திய அணியின் முன்பு மற்ற எந்த அணியாலும் நிற்க முடியாது!” -ஹர்பஜன் சிங் பெருமிதம்

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், 'தற்போது இருக்கும் இந்திய அணியின் முன்பு எந்த அணியும் நிற்க முடியாது' எனத் தெரிவித்துள்ளார். 

இந்திய அணி

இந்திய அணி, நியூஸிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. ஆஸ்திரேலியாவில் வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்த இந்திய அணி, தற்போது நியூஸிலாந்து மண்ணிலும் சாதித்துவருகிறது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை வென்ற இந்திய அணிக்குப் பாராட்டுகள் குவிந்துவருகிறது. முன்னதாக, நியூஸிலாந்து தொடர் இந்திய அணிக்குக் கடினமாக இருக்கும் எனப் பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

ஹர்பஜன் சிங்

மீதம் இருக்கும் 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.         4 -வது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், 'இந்தியா டுடே' ஊடகத்துக்கு தற்போதைய இந்திய அணிகுறித்து பேட்டி அளித்த முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், இந்திய வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர் என்று பாராட்டினார். அவர்,  ``தற்போது இருக்கும் நியூஸிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியை விடச் சிறந்த அணி என்பதில் சந்தேகமே வேண்டாம். ஆனால், இந்திய அணி அவர்களை விடவும் சிறப்பாக விளையாடியது. 

பல நேரங்களில் மற்ற அணியின் விளையாட்டைப் பாராட்டும் நாம், நமது அணியின் பலத்தைக் கண்டுகொள்வதில்லை. ஆனால், 'தற்போது இருக்கும் இந்திய அணியின் முன்பு வேறு எந்த அணியும் நிற்க முடியாது'. நியூஸிலாந்து சிறந்த அணி. ஆனால், இந்தியா அதுக்கும் மேல். 

ஷமி

இந்தத் தொடரில், இந்திய வீரர் ஷமி குறித்துக் குறிப்பிட வேண்டும். உலகக்கோப்பை தொடரில், இந்திய அணிக்கு மிகத் தேவையான பந்துவீச்சாளர் அவர். அவர் விக்கெட்டுகள் எடுப்பதையும், ஆட்ட நாயகன் விருதுகள் பெறுவதையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.