தேனீக்களால் பார்வையாளர்களுக்கு நேர்ந்த கதி! - 15 நிமிடம் நிறுத்திவைக்கப்பட்ட கிரிக்கெட் போட்டி | Bees Entered in Cricket Stadium

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (30/01/2019)

கடைசி தொடர்பு:20:21 (30/01/2019)

தேனீக்களால் பார்வையாளர்களுக்கு நேர்ந்த கதி! - 15 நிமிடம் நிறுத்திவைக்கப்பட்ட கிரிக்கெட் போட்டி

தேனீகள்

திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன் ஃபீல்டு சர்வதேச மைதானத்தில் இந்தியா ‘ஏ’ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் இன்று நடைபெற்றது. மைதானத்துக்குள் அழையா விருந்தாளியாக வந்த தேனீக்களால் ஆட்டம் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.  ஆட்டத்தின் 28 வது ஓவரின்போது மைதானத்துக்குள் படையெடுத்த தேனீக்கள் அங்கிருந்த பார்வையாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தன. தேன் சுவையாகத்தான் இருக்கும் அதற்காகத் தேனீக்களின் கொட்டுகளை வாங்கவா முடியும்? பார்வையாளர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தனர். சிலர் தங்களது ஆடைகளைக் கொண்டு தேனீகளை விரட்டிக்கொண்டு ஓடினர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

மைதானத்துக்குள் தேனீக்கள் வரத்தால் விளையாட்டு வீரர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அணி நிர்வாகத்தினருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. தேனீக்கள் படையெடுத்து வந்த சமயம் இந்திய ‘ஏ’ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வராந்தாவில் நடந்துகொண்டிருந்தார். தேனீக்கள் வந்ததையடுத்து அவரும் அங்கிருந்து ஓட்டம்பிடித்தார். அவருக்கு எந்தக் காயங்களும் ஏற்படவில்லை. இதில் காயமடைந்த சில பார்வையாளர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுதொடர்பாகப் பேசியுள்ள அதிகாரிகள், “இது எதிர்பாராமல் நடந்த சம்பவம் ஆகும். கேலரியில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் போட்டியை ரசித்துக்கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் படிக்கட்டுகளின் மேலே சென்று வேண்டாத சில வேலைகளைச் செய்துள்ளார். இதை அவர்கள் வேண்டுமென்றே செய்தார்கள் இல்லை தெரியாமல் செய்தார்களா எனத் தெரியவில்லை” என்றார்.