`விராட் கோலியை மட்டுமே சார்ந்திருக்க விரும்பவில்லை!’ - புவனேஷ்வர் குமார் | Indian Pacer Bhuvi speaks about hamilton ODI

வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (31/01/2019)

கடைசி தொடர்பு:18:10 (31/01/2019)

`விராட் கோலியை மட்டுமே சார்ந்திருக்க விரும்பவில்லை!’ - புவனேஷ்வர் குமார்

நியூஸிலாந்து அணிக்கெதிரான 4வது ஒருநாள் போட்டி தோல்வி குறித்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் பேசியிருக்கிறார். 

புவனேஷ்வர் குமார்

ஹாமில்டனில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூஸிலாந்தின் டிரெண்ட் போல்ட் சிறப்பாகப் பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சுழற்பந்துவீச்சாளர் சஹால், 18 ரன்கள் சேர்த்தார். இந்திய அணியின் 7 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 14.4 ஓவர்களில் இலக்கை எட்டியது. தொடக்க ஆட்டக்காரர் நிகோலஸ் 30 ரன்னுடனும் டெய்லர் 37 ரன்னுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளை வென்று இந்திய அணி ஏற்கெனவே தொடரை வென்றிருக்கிறது. இதன்மூலம் நியூஸிலாந்து அணி ஆறுதல் வெற்றி பெற்றிருக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5வது போட்டி பிப்ரவரி 3-ம் தேதி நடைபெறுகிறது. 
போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், ``இந்தத் தோல்வியால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்திய அணிக்கு, உண்மையில் இது கள நிலவரத்தை அறிந்துகொள்ள உதவும் ஓர் அளவுகோல். மேலும், நல்ல பாடமாக இந்தப் போட்டி அமைந்தது. இதனால், அதிருப்தி அடையவில்லை. சில நேரங்களில் இதுபோன்ற போட்டிகள் அமைந்துவிடும். அது இயல்புதான். 

நியூசிலாந்து வீரர்கள்

கடந்த சில மாதங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். இதுபோன்ற போட்டிகள் நம்மை நாமே சோதித்துக்கொள்ள உதவும். நாம் செய்த தவறுகளை ஆய்வு செய்து, எதிர்காலத்தில் அது நடக்காமல் இருக்க இதுபோன்ற போட்டிகள் உதவும்’’ என்றார்.

கேப்டன் விராட் கோலியின் ஆப்சென்ஸ் குறித்து பேசிய புவனேஷ்வர் குமார், ``அவரைப் போன்ற ஒரு வீரரை நாம் எப்போதும் மிஸ் செய்வோம். அதேநேரம், அவருக்குப் பதிலாக அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரருக்கு இது நல்ல வாய்ப்பை வழங்கும். நாங்கள் எப்போதும் விராட் கோலியை மட்டுமே சார்ந்திருக்க விரும்பவில்லை. அவருடைய சாதனைகள் மிகப்பெரியவை’’ என்றார். 

தவான் - ரோஹித் ஷர்மா

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினார்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், ``இதை நான் அப்படிப் பார்க்கவில்லை. நாங்கள் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய மைதானங்களில் விளையாடி இருக்கிறோம். அங்கு சிறப்பான செயல்பாட்டையே வெளிப்படுத்தினோம். என்னைப் பொறுத்தவரை அவர்கள் சிறப்பாகப் பந்துவீசினார்கள். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள், தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டதாக நான் நினைக்கவில்லை. பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளம் இது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த அணிக்கும் இது சிறந்த பாடம்’’ என்றார்.