ஓராண்டுக்குப் பின்னர் 200 ரன்களுக்கு மேல் பாட்னர்ஷிப்! - பேட்டிங்கில் எழுச்சிகண்ட ஆஸ்திரேலியா #AUSvSL | Australia scores 384 runs in first day of canberra test

வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (01/02/2019)

கடைசி தொடர்பு:17:50 (01/02/2019)

ஓராண்டுக்குப் பின்னர் 200 ரன்களுக்கு மேல் பாட்னர்ஷிப்! - பேட்டிங்கில் எழுச்சிகண்ட ஆஸ்திரேலியா #AUSvSL

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 384 ரன்கள் எடுத்தது. 

ஜோ பர்ன்ஸ்

கான்பெர்ரா மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி அளித்தனர். அந்த அணி 28 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர் ஹாரிஸ் 11 ரன்களிலும் உஸ்மான் கவாஜா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தபோது 4 வது விக்கெட்டுக்குத் தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் கைகோத்தனர். இந்த ஜோடி ஆஸ்திரேலிய அணியை சரிவிலிருந்து மீட்கப் போராடியது. அதேநேரம், மோசமான பந்துகளைப் பவுண்டரிக்கு விரட்டவும் இந்த ஜோடி தவறவில்லை. 

இலங்கை அணி வீரர்கள்

34 ரன்களில் கேட்ச் கண்டத்திலிருந்து தப்பிய பர்ன்ஸ், 147 பந்துகளில் தனது 4 வது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் பாகிஸ்தானுக்கு எதிராக உஸ்மான் கவாஜா சதமடித்த பிறகு டெஸ்ட் போட்டிகளில் சதமடிக்கும் ஆஸ்திரேலிய வீரர் இவராவார். அதேபோல், இங்கிலாந்துக்கு எதிராக 13 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஆஷஸ் தொடரின் 5வது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் சதமடிக்கும் இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் இவராவார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டிராவிஸ் ஹெட், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் முதல் சதத்தைப் பதிவு செய்தார். 

ஜோ பர்ன்ஸ் - டிராவிஸ் ஹெட்

இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 308 ரன்கள் சேர்த்த நிலையில், டிராவிஸ் ஹெட் 161 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பருக்குப் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் குவிப்பது இதுவே முதல்முறையாகும். கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பரில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் - மிட்செல் மார்ஸ் ஜோடி 200 ரன்களுக்கு மேல் பாட்னர்ஷிப் அமைத்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 384 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. தொடக்க வீரர் ஜோ பர்ன்ஸ் 172 ரன்களுடனும் பேட்டர்சன் 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கின்றனர். இலங்கை அணி தரப்பில் விஸ்வா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.