`வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களில் வீரர்களின் குடும்பங்களைக் கவனிக்க முடியவில்லை!’ - பி.சி.சி.ஐ | Touring with family is a big problem for BCCI

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (01/02/2019)

கடைசி தொடர்பு:19:50 (01/02/2019)

`வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களில் வீரர்களின் குடும்பங்களைக் கவனிக்க முடியவில்லை!’ - பி.சி.சி.ஐ

வீரர்கள் குடும்பத்தினருடன் வருவதால் டிக்கெட் புக்கிங், தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்வது, அவர்களை போட்டி நடைபெறும் இடத்துக்கும் மீண்டும் தங்குமிடத்துக்கும் அழைத்துச் செல்வது, பாதுகாப்பு வசதிகள் எனப் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல இவர்களுக்குப் போட்டிக்கான டிக்கெட் ஏற்பாடு செய்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

`இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, தங்களுடைய குடும்பத்தினரையும் உடன் அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்’ என கேப்டன் விராட் கோலி கோரிக்கை விடுத்திருந்தார். இதை பி.சி.சி.ஐ ஏற்றுக்கொண்டது. இருப்பினும், `நீண்ட கால சுற்றுப் பயணம் எனில், தொடர் தொடங்கிய 10 நாள்களுக்குப் பிறகு வீரர்கள் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினரை அழைத்துக்கொள்ளலாம்’ எனக் கட்டுப்பாடும் விதித்திருந்தது. குடும்பத்தினர் அங்கு தங்கும் நாள்களின் எண்ணிக்கை சுற்றுப்பயணம் நீடிக்கும் நாள்களைப் பொறுத்து மாறுபடும் என்றும் தெரிவித்திருந்தது. 

பிசிசிஐ

சுற்றுப்பயணத்தின்போது தங்களின் குடும்பத்தினருக்கான செலவை வீரர்களே ஏற்றுக்கொள்கின்றனர். நிதியைப் பொறுத்தவரை பி.சி.சி.ஐ-க்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், வீரர்களுடன் செல்லும் குடும்பத்தினருக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்வது, மேட்ச் டிக்கெட் ரெடி செய்வது என வேறுவிதமான பிரச்னைகள் ஏற்படுகின்றன.

பிசிசிஐ

பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது வீரர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே சிரமமாக இருந்தது. வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் என 40-க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். இவர்களுக்காக இரண்டு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோதும் எங்களால் இதைச் சமாளிக்க முடியவில்லை” என்றார். 

“குறைந்த எண்ணிக்கையிலான வீரர்களுடன் பயணம் செய்யும்போது அவர்களைக் கவனித்துக்கொள்வது எளிது. ஆனால், வீரர்களின் குடும்பத்தினரும் வருவதால் டிக்கெட் புக்கிங், தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்வது, அவர்களைப் போட்டி நடைபெறும் இடத்துக்கும், தங்குமிடத்துக்கும் அழைத்துச்செல்வது, போட்டிக்கான டிக்கெட் ஏற்பாடு செய்வது எனப் பல பிரச்னைகளைச் சந்திக்க நேரிடுகிறது. எல்லா போட்டிகளிலும் பங்கேற்கும் வீரர்கள் தங்களுடைய குடும்பத்தினரை அழைத்துவந்தால்கூடப் பரவாயில்லை. பிளேயிங் லெவனில் இடம்பெறாத வீரர்கள்கூட, குடும்பத்தினரை இரண்டு வாரங்கள் தங்களுடன் தங்க வைத்திருந்தனர்” என்றார்.

“தொடர்ந்து இதேபோல இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கும் வீரர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்தால் அவர்களைச் சமாளிப்பது மிகப்பெரிய சிக்கலாக இருக்கும். இதுதொடர்பாக பிசிசிஐ சில முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளது” என்றார்.  வீரர்கள் யாரும் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.