`அடுத்த தலைமுறைக்கான தரமான வீரர்களும் தயார்!’ - பி.சி.சி.ஐ தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் | India need not worry for quality players - msk prasad

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (01/02/2019)

கடைசி தொடர்பு:09:18 (02/02/2019)

`அடுத்த தலைமுறைக்கான தரமான வீரர்களும் தயார்!’ - பி.சி.சி.ஐ தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத்

கிரிக்கெட் உலகை ஆண்டுகொண்டிருந்த அணிகள் இன்று ஒவ்வொரு வெற்றிக்கும் போராடிக்கொண்டிருக்கின்றனர். இதுபோன்ற நிலைமை இந்திய அணிக்கு எதிர்காலத்தில் ஏற்படாது எனத் தேர்வுக்குழு தலைவர் எம்.கே.பிரசாத் பேசியுள்ளார். 

கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம், இளம் வீரர்கள் வருகை, உலகக்கோப்பை போட்டி குறித்து பேசியுள்ள தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், “சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தபோதே எங்கள் திட்டங்களை வகுக்கத் தொடங்கிவிட்டோம். எங்களிடம் இருந்த குறைகளை அதன்மூலம் அறியத்தொடங்கிவிட்டோம். அந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான பணிகளைத் தொடங்கிவிட்டோம். அதற்கான பலன்களும் தற்போது கிடைத்துவிட்டது.

பிரசாத்
 

நமது அணியின் மீது மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. எவ்வளவு பெரிய இலக்கையும் அடைய வெற்றிகரமாகத் துரத்திப் பிடிப்பார்கள். நமது அணியில் அனுபவ வீரர்கள், இளம்வீரர்கள் ஒரு கலவையாக இருக்கிறார்கள், அவர்கள் பயமில்லாத கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள். ஹர்திக் பாண்ட்யா வருகை மிடில் ஆர்டரை மேலும் பலமாக்கியுள்ளது. பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் ஆகிய துறைகளுக்குப் பலம் சேர்க்கிறது. அவரிடம் திறமைகள் உள்ளன. அதை அவர் உணர்ந்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்க வேண்டும்.

கடந்த சில வருடங்களாக வேகப்பந்துவீச்சாளர்களை அடையாளம் கண்டு வருகிறோம். பும்ராவை முதலில் டி-20 ஸ்பெலிஸ்டாகத்தான் அடையாளம் கண்டோம். ஆனால், அவர் டெஸ்ட் போன்ற தொடர்களிலும் தனது திறமையைக் காட்டியுள்ளார். அவருடைய ஃபிட்னஸும் டெடிக்கேஷனும்தான் அவரை வெற்றிகரமாக வழிநடத்திச் செல்கிறது. ஒரு வருடத்திலே இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். ஐ.சி.சி பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் சிறந்த இடத்தைப் பிடித்துள்ளார்.

ஷமி

ப்ரித்வி ஷா. சுப்மான் கில் போன்ற இளம்வீரர்கள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடிவருகின்றனர். ரவி சாஸ்திரி, டிராவிட் மற்றும் எங்கள் குழுவினர் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தோம். இளம்வீரர்களின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை இந்தியா ‘ஏ’ அணியில் இருந்து இந்திய அணிக்கு விளையாட வாய்ப்பு அளிக்கப்படுகிறது. உள்ளூர் போட்டிகளில் இருந்து திறமையான வீரர்களை கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஐ.பி.எல் போட்டிகளும் இதற்கு உதவியாக இருக்கிறது. அங்கிருந்து திறமையான வீரர்களை டி-20 கிரிக்கெட்டுக்குத் தேர்வு செய்கிறோம். அவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்வதன் மூலம் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்து செல்கின்றனர்.

விராட் கோலி

எதிர்காலத்தில் இந்திய அணி திறமையான வீரர்களைத் தேடுவதற்கான அவசியம் இருக்காது. நான் உள்ளூர் போட்டிகளைக் காண்பதையே விரும்புகிறேன். அங்கிருந்துதான் திறமையான வீரர்களை அடையாளம் காண முடியும். ஒரு காலத்தில் கிரிக்கெட் உலகையே ஆட்டிப்படைத்த அணிகள் எல்லாம் இன்று சிறந்த வீரர்களைத் தேடிக்கொண்டிருக்கின்றன. அதுபோன்ற நிலை இந்தியாவுக்கு வராது. நானும் எனது குழுவும் இந்தப் பணியைவிட்டுச் செல்லும்போது இந்திய கிரிக்கெட் அணி மூன்று விதமான போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தும். இந்தியா திறமையான வீரர்களைத் தேட வேண்டிய அவசியம் இருக்காது. அடுத்த தலைமுறைக்கான தரமான வீரர்கள் அல்லது மாற்று வீரர்கள் எந்தக் கவலையும் இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.