``ஏற்றம், இறக்கம் என அனைத்தையும் சந்தித்திருக்கிறேன்” - மிதாலி ராஜ் உருக்கம் | Mithali raj shares about her travel till 200th ODI match

வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (02/02/2019)

கடைசி தொடர்பு:08:20 (02/02/2019)

``ஏற்றம், இறக்கம் என அனைத்தையும் சந்தித்திருக்கிறேன்” - மிதாலி ராஜ் உருக்கம்

மிதாலி ராஜ்... இந்திய பெண்கள் கிரிக்கெட் குறித்துச் சிந்திக்கும்போது தவிர்க்க முடியாத பெயர். அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் நேற்று நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கியதன் மூலம், 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் வீராங்கனை என்ற மகத்தான சாதனையைப் படைத்தார். 

மிதாலி ராஜ்

36 வயதான மிதாலி, 1999-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அறிமுகமானார். அன்றிலிருந்து இன்று வரை நிற்காமல் ஓடி வருகிறார். இந்திய பெண்கள் அணி இதுநாள் வரையில் 263 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் மிதாலி 200 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுவே, இந்தியப் பெண்கள் கிரிக்கெட்டில் இவரின் பங்களிப்பை உணர்த்தும். இந்தியப் பெண்கள் அணியின் வெற்றி தோல்விகளில் உடன் இருந்து, அணியின் தலைவியாக, ஒரு முன்னுதாரண பெண்ணாகத் திகழ்கிறார். 

கேக் வெட்டி கொண்டாட்டம்

இத்தனை சாதனைகளைக் கையில் வைத்திருந்தாலும், 200 வது போட்டி என்பது வெறும் நம்பர்தான் என்கிறார் தன்னடக்கமாக. 200 போட்டிகள் கடந்தது தொடர்பாக மிதாலி பேசும்போது, ``200 என்பது வெறும் நம்பர்தான். ஆனால், இத்தனை காலம் அணியுடன் இருக்கிறது ஒரு நல்ல உணர்வைத் தருகிறது. இந்தியப் பெண்கள் அணியில் மட்டுமல்ல, சர்வதேசப் பெண்கள் கிரிக்கெட்டில் பல்வேறு மாற்றங்களை இந்த 20 ஆண்டுகளில் நான் பார்க்கிறேன். இத்தனை ஆண்டுக்காலம் இந்திய அணிக்காக விளையாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது. 

கிரிக்கெட் விளையாட ஆரம்பிக்கும்போது, நான் இங்கு வருவேன் என நினைக்கவே இல்லை. ஆரம்பத்தில், இந்திய அணியின் ஜெர்சியை அணிய வேண்டும் என்றுதான் கனவு கண்டேன். அதன் பின்னர், அணியில் தவிர்க்க முடியாத நபராக இருக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், இத்தனை காலம் அணியில் இருப்பேன் என நான் நினைத்துப் பார்த்ததே இல்லை” என்றார். 

பயிற்சியாளருடன்

தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த மிதாலி, ``இந்த நீண்ட பயணத்தில் இன்பம், துன்பம், ஏற்றம் இறக்கம் என எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். மிக நீண்ட காலமாக இருக்கும்போது இவை அனைத்தையும் சந்தித்துதான் ஆக வேண்டும்” என்றார். இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 6,622 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீராங்கனை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இதில் 7 சதங்களும் அடக்கம். மேலும் 10 டெஸ்ட் மற்றும் 85 டி20 போட்டிகளில் அவர் பங்கேற்றிருக்கிறார்.