`38 ஆண்டுகளுக்கு முன் எல்லாம் இங்குதான் தொடங்கியது!’ - ரவி சாஸ்திரியின் நாஸ்டால்ஜி மொமன்ட் | Ravi shastri shares fond memories about Basin reserve ground, where he made his debut in 1981

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (02/02/2019)

கடைசி தொடர்பு:16:40 (02/02/2019)

`38 ஆண்டுகளுக்கு முன் எல்லாம் இங்குதான் தொடங்கியது!’ - ரவி சாஸ்திரியின் நாஸ்டால்ஜி மொமன்ட்

சர்வதேச கிரிக்கெட்டில் தான் அறிமுகமான நாள்கள் குறித்து, இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நினைவு கூர்ந்திருக்கிறார். 

ரவி சாஸ்திரி

நியூஸிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. 4 ஒருநாள் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. முதல் 3 போட்டிகளைத் தொடர்ச்சியாக வென்று, தொடரையும் வென்ற இந்திய அணி, 4-வது ஒருநாள் போட்டியில் 92 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தது. அந்தப் போட்டியில், நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி, வெலிங்க்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடக்கிறது. 

இந்த மைதானத்தில்தான் தற்போதைய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி, 38 ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். கடந்த 1981-ம் ஆண்டு, பிப்ரவரி 21-ம் தேதி நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டி மூலம், ரவி சாஸ்திரி சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்துவைத்தார். 

பேசின் ரிசர்வ் மைதானம்

தற்போது, மீண்டும் பேசின் ரிசர்வ் மைதானத்துக்குச் சென்றுள்ள ரவி சாஸ்திரி, பழைய நினைவுகளில் மூழ்கியிருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ள ரவி சாஸ்திரி, ``38 ஆண்டுகளுக்குப் பின்னர், தொடங்கிய இடத்துக்கே மீண்டும் இந்திய அணியின் ஜெர்சியோடு திரும்ப வருவேன் என்று நான் நினைத்துப் பார்த்ததில்லை. எங்கு சென்றாலும், தொடங்கிய இடத்துக்கு வந்துதான் ஆகவேண்டும் என்று சொல்வார்கள். பேசின் ரிசர்வ் குறித்து நெஞ்சின் ஆழத்தில் நிறைய நல்ல நினைவுகள் உண்டு’’ என்று ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார்.

ரவி சாஸ்திரி

மேலும், `38 ஆண்டுகள்...1981-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான பேசின் ரிசர்வ் மைதானத்தில், இந்திய அணியின் ஜெர்ஸியுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி’ என்றும், ரவி சாஸ்திரி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். 

இந்திய அணிக்காக 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரவி சாஸ்திரி, 11 சதங்கள், 12 அரைசதங்கள் உள்பட 3830 ரன்கள் மற்றும் 151 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். அதேபோல, 128 ஒருநாள் போட்டிகளில் 4 சதங்கள், 18 அரை சதங்களுடன் 3108 ரன்களும், 129 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார்.