`இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை!' - பவுன்சர் குறித்து கம்மின்ஸ் விளக்கம் | Pat Cummins relieved About bouncer

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (02/02/2019)

கடைசி தொடர்பு:19:10 (02/02/2019)

`இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை!' - பவுன்சர் குறித்து கம்மின்ஸ் விளக்கம்

கம்மின்ஸ்

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியா அணி 534 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணிக்கு, கருணாரத்னே - திரிமனே சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். 30-வது ஓவரில், ஒரு விக்கெட் கூட இழக்கவில்லை. இருவரும் பொறுமையாக விளையாடிவந்தனர். 31-வது ஓவரை ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ் வீசினார். 142 கி.மீட்டர் வேகத்தில் கம்மின்ஸ் வீசிய பந்து கருணாரத்னேவின் கழுத்தின் பின்புறம் பலமாகத் தாக்கியது. இதில் நிலைகுலைந்துபோனவர், மைதானத்தில் சுருண்டுவிழுந்தார். போட்டியைக் கண்டுகளித்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். களத்தில் என்ன நடக்கிறது எனத் தெரியாததால், கேலரியே அமைதியானது. களநடுவர் மருத்துவக் குழுவை அழைத்தார்.

கருணாரத்னே

பவுன்சர் பந்துகளால் சக வீரரை, நண்பனை இழந்த வலி ஆஸ்திரேலியர்களுக்குத் தெரியும். பிலிப்பின் மரணத்தில் இருந்தே அவர்கள் இன்னும் மீளவில்லை. மைதானத்துக்கு விரைந்த மருத்துவர், கருணாரத்னேவை சோதித்தனர். கருணாரத்னே நினைவை இழக்கவில்லை. மற்றவர்களிடம் உரையாடினார். கை, கால்களில் அசைவுகள் இருந்தது. ஸ்ட்ரெச்சர் வரவழைக்கப்பட்டு மைதானத்திலிருந்து அவர் வெளியே கொண்டுசெல்லப்பட்டார். அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர், நலமுடன் இருப்பதாக இலங்கைப் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வீரர்

கருணாரத்னேவுக்கு மருத்துவக் குழு சிகிச்சை அளித்தபோது, மைதானத்தில் கம்மின்ஸ் அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தார். போட்டி முடிந்த பின்னர் இதுகுறித்து பேசிய கம்மின்ஸ், “ மைதானத்தில் வீரர் ஒருவர் சுருண்டுவிழுவது நல்ல தருணமாக இருக்காது. இதில் நல்ல விஷயம் என்ன வென்றால், அவர் கை கால்கள் அசைவுடன் இருந்தது. மருத்துவக் குழுவும் அவர் நலமுடன் இருப்பதாகக் கூறினர். அவர் நலம்பெற்று திரும்ப வேண்டுகிறேன். எதிர்பாராத விதமாக கிரிக்கெட்டில் இதுபோன்று நடந்துவிடுகிறது. எதிரணி வீரராக இருந்தாலும் அவர் நலமுடன் இருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்” என்றார்.