அசத்தல் `அம்பதி ராயுடு’; சரவெடி `பாண்ட்யா’ -நியூஸிலாந்து அணிக்கு 253 ரன்கள் இலக்கு | India vs New Zealand 5th ODI

வெளியிடப்பட்ட நேரம்: 11:04 (03/02/2019)

கடைசி தொடர்பு:11:20 (03/02/2019)

அசத்தல் `அம்பதி ராயுடு’; சரவெடி `பாண்ட்யா’ -நியூஸிலாந்து அணிக்கு 253 ரன்கள் இலக்கு

இந்திய நியூஸிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் 5 -வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற 253 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

ராயுடு

Photo Credit: Twitter/BCCI

இந்திய நியூஸிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி வென்று தொடரை கைபற்றிவிட்டது. அதனால் கடைசி இரு போட்டிகளில் இருந்து கேப்டன் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டது. அதனால் ரோஹித் ஷர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். 

போல்ட்

Photo Credit: Twitter/ICC

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் பேட்டிங் தேர்வு செய்தார். காயம் காரணமாக கடந்த இரு போட்டிகளில் களம் இறங்காத தோனி, இன்றைய போட்டியில் அணிக்குத் திரும்பினார். 

இந்திய அணிக்குத் தொடக்கமே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ரோஹித் 2 ரன்னில் ஆட்டமிழக்க, தவானும் 6 ரன்னில் நடையைக் கட்டினார். அடுத்துக் களமிறங்கிய இளம் வீரர் சுப்மான் கில் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் நம்பிய தோனியும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 

கேதர் ஜாதவ், ராயுடு

Photo Credit: Twitter/BCCI

அதன் பின்னர் ராயுடுவுடன் சேர்ந்த தமிழக வீரர் விஜய் ஷங்கர், பொறுமையாக விளையாடினர். இந்த ஜோடி, விக்கெட் விழாமல் பார்த்து கொண்டதுடன், தேவையான இடத்தில் அதிரடியையும் காட்டியது. இந்த கூட்டணியை பிரிக்க நியூஸிலாந்து கடுமையாக முயன்றது. பந்துவீச்சாளர்களை மாற்றியும் பலன் கிடைக்கவில்லை. இறுதியில் விஜய் ஷங்கர் 45 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 

அதன் பின்னர் ஜாதவ் மற்றும் ராயுடு இணைந்து அதிரடியாக விளையாடினர்.  இதனால் ரன் ரேட்டும் உயர்ந்தது. குறிப்பாக அரைசதம் கடந்த ராயுடு, அதிரடியில் இறங்கினார். சிக்ஸர்கள் பறக்கவிட்டு, ரசிகர்களைக் கொண்டாடவைத்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 90 ரன்னில் ஆட்டமிழந்தார் ராயுடு. 

பாண்ட்யா

Photo Credit: Twitter/BCCI

சிறப்பாக விளையாடிய ஜாதவ் 34 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் பாண்ட்யா அதிரடியில் இறங்கினார். ஒரே ஓவரில் 3 சிக்ஸர்கள் அடித்து ரன்ரேட்டை உயர்த்தினார்.

இறுதியாக 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ராயுடு 90 ரன்கள் எடுத்தார். பாண்ட்யா அதிரடியாக 22 பந்துகளில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதில் 5 சிக்ஸர்கள் அடக்கம். நியூசிலாந்து தரப்பில் ஹென்றி 4 விக்கெட்டுகள் எடுத்தார்.