முதல்முறையாக நியூசிலாந்தில் 4 போட்டிகளில் வெற்றி! - சாதித்த இந்திய அணி #NZvIND | India clinch the final ODI by 35 runs and wrap the series 4-1

வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (03/02/2019)

கடைசி தொடர்பு:19:13 (03/02/2019)

முதல்முறையாக நியூசிலாந்தில் 4 போட்டிகளில் வெற்றி! - சாதித்த இந்திய அணி #NZvIND

நியூசிலாந்து அணிக்கெதிரான 5வது ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது. 

தோனி

Credits: ICC

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது.  டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். ரோஹித் - தவான் இணை இந்திய அணியின் இன்னிங்ஸை தொடங்கினர். ஆனால் ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. 4-வது ஓவரில் 2 ரன்கள் எடுத்தநிலையில் ரோஹித் நடையைகட்டினார். இதனையடுத்து சுப்மான் கில் களம்புகுந்தார். கடந்த போட்டியில் பந்துவீச்சில் மிரட்டிய ட்ரெண்ட் பவுல்ட்  இன்று இந்திய வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தார்.

கிரிக்கெட்

தவான் விக்கெட்டை வீழ்த்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். விரைவிலே விக்கெட்டுகள் விழுந்ததால் அம்பாத்தி ராயுடு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ஹெண்றி - பவுல்ட் கூட்டணி மிரட்டியது. சுப்மான் கில்லை ஹென்றி வெளியேற்றினார். ட்ரெண்ட் பவுல்ட் ஓவரில் தோனியும் ஆட்டமிழந்து வெளியேறினார். 9 ஓவர்களில் இந்திய அணி 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 

அம்பாதி ராயுடு

இந்தநிலையில் அம்பாத்தி ராயுடுவுடன் - தமிழக வீரர் விஜய் சங்கர் இணைந்தார். இவர்கள் இருவரும் பொறுப்புடன் விளையாடினர்.இந்த ஜோடி, விக்கெட் விழாமல் பார்த்து கொண்டதுடன், தேவையான இடத்தில் அதிரடியையும் காட்டியது.  இந்தக்கூட்டணியை பிரிக்க முடியாமல் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறினர். அதற்குள் ராயுடு அரைசதத்தை கடந்தார். தொடர்ந்து சதத்தை நோக்கி விரைவாக முன்னேறிக்கொண்டிருந்தார். இந்நிலையில் விஜய் சங்கர் 45 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் களமிறங்கிய கேதர் ஜாதவ் நல்ல ஒத்துழைப்பு கொடுக்க ராயுடு அதிரடியில் மிரட்டினார். ரன் ரேட்டும் வெகுவாக உயர்ந்தது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராயுடு, 90 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பாண்ட்யா

பின்னர் களமிறங்கிய பாண்ட்யா அதிரடியில் மிரட்டினார். ரன்ரேட்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு அட்டகாசப்படுத்தினார். இறுதியில் இந்திய அணி  49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ராயுடு 90 ரன்கள் எடுத்தார். பாண்ட்யா அதிரடியாக 22 பந்துகளில் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து தரப்பில் ஹென்றி 4 விக்கெட்டுகள் எடுத்தார். 

நியூசிலாந்து

நியூசிலாந்து அணி 253 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க ஜோடியை விரைவிலே இந்திய வீரர்கள் வெளியேற்றினர். 10 ஓவர்களில் அந்த அணி 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. கேப்டன் வில்லியம்ஸன் களத்தில் இருந்து மிரட்டிக் கொண்டிருந்தார். அவருக்கு லாதம் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தால் ரன் வேகம் உயர்ந்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி நல்ல நிலையை எட்டியது. இந்த ஜோடியை கேதர் ஜாதவ் பிரித்தார். கொஞ்ச நேரம் களத்தில் நீஷம் மிரட்டிக்கொண்டிருந்தார் அவரை தோனி ரன் அவுட் செய்ய இந்திய வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ஷமி

நியூசிலாந்து அணி 44 ஓவர்களில் 217 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரையும் 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றிபெறுவது இதுவே முதல்முறை. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 90 ரன்கள் குவித்த அம்பாதி ராயுடு ஆட்டநாயகனாகவும், 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.