`விராட் கோலி இடத்தில் களமிறங்க முடியுமா?’ - சஹாலின் கேள்வியும் ரோஹித் ஷர்மாவின் பதிலும் #ViralVideo | Chahal asks about batting promotion to Rohit sharma

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (03/02/2019)

கடைசி தொடர்பு:07:44 (04/02/2019)

`விராட் கோலி இடத்தில் களமிறங்க முடியுமா?’ - சஹாலின் கேள்வியும் ரோஹித் ஷர்மாவின் பதிலும் #ViralVideo

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவை, சுழற்பந்து வீச்சாளர் சஹால் நேர்காணல் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. 

ரோஹித் ஷர்மா - சஹால்

Photo Credit: BCCI

நியூசிலாந்து அணிக்கெதிரான 5வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, 4-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது. இதன்மூலம் முதல்முறையாக நியூசிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 4 போட்டிகளை வென்று இந்திய அணி சாதனை படைத்திருக்கிறது. இக்கட்டான சூழலில் அணியை மீட்டெடுத்து 90 ரன்கள் குவித்த அம்பாதி ராயுடு ஆட்ட நாயகனாகவும் 4 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய முகமது ஷமி தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர். 

கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள்

Photo Credit: BCCI

போட்டிக்குப் பின்னர் கேப்டன் ரோஹித் ஷர்மாவை, தன்னுடைய சஹால் டிவிக்காக, சுழற்பந்துவீச்சாளர் சஹால் பேட்டி எடுத்தார். அப்போது, இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் வழக்காமாக 3வது வீரராகக் களமிறங்கும் விராட் கோலி இல்லாத நிலையில், அவரது இடத்தில் தன்னைக் களமிறக்க முடியுமா என்று சஹால் விளையாட்டாகக் கேட்டார். இதற்கு சீரியஸாகப் பதிலளித்த ரோஹித் ஷர்மா, `இது தொடர்பாக அணி நிர்வாகத்திடம் பேசி உங்களை 3வது வீரராகக் களமிறக்க முடியுமா என்று நான் பார்க்கிறேன். ஆனால், இந்திய அணி வெற்றிபெற்ற போட்டியில் டாப் ஸ்கோரராக நீங்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மாறாக, அணி தோல்வியடைந்த போட்டியில் அல்ல’’ என்று ரோஹித் பதிலளித்திருக்கிறார்.

நியூசிலாந்துக்கெதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 92 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்தப் போட்டியில், இந்தியாவின் டாப் ஸ்கோரர் 11வது வீரராகக் களமிறங்கிய சஹால்தான். அவர், 37 பந்துகளைச் சந்தித்து 18 ரன்கள் சேர்ந்திருந்தார். இதையடுத்து, அவர் ஒன் டவுன் பேட்ஸ்மேனாகக் களமிறங்க வாய்ப்பிருக்கிறதா என ரோஹித் ஷர்மாவிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார். பணிச்சுமை காரணமாக இந்திய அணியின் வழக்கமான கேப்டன் விராட் கோலிக்கு, கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடரில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், இந்திய அணி ரோஹித் ஷர்மா தலைமையில் களம்கண்டது. 

விஜய் சங்கர் - அம்பாதி ராயுடு ஜோடி

Photo Credit: BCCI

சஹாலுடனான நேர்காணலில் இன்றைய போட்டி குறித்து பேசிய ரோஹித் ஷர்மா, ``இந்தத் தொடரில் நமது அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இன்றைய போட்டி சிறப்பானதாக இருந்தது. 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தபோது, எனக்கு 4வது ஒருநாள் போட்டி நினைவுக்கு வந்துபோனது. ஆனால், அம்பாதி ராயுடு - விஜய் ஷங்கர் ஜோடி சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டது. அதேபோல், கேதர் ஜாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் சிறப்பாகப் பங்களித்தனர். ராயுடுவின் ஆட்டம் அவருக்கும், அணிக்கும் ஒரு பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது’’ என்றார்.