இரண்டரை ஆண்டுகளில் இதுதான் முதல்முறை! - 220 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூஸிலாந்து #NZvIND | NewZealand score 219 runs in the first T20I against India

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (06/02/2019)

கடைசி தொடர்பு:15:40 (06/02/2019)

இரண்டரை ஆண்டுகளில் இதுதான் முதல்முறை! - 220 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூஸிலாந்து #NZvIND

கிரிக்கெட்


நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியக் கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி  டிம் செய்பெர்ட் - காலின் முன்றோ ஆகியோர் நியூஸிலாந்து இன்னிங்ஸை தொடங்கினர். புவனேஷ்வர் குமாரின் முதல் ஓவரில் 4 ரன்கள் எடுத்தனர். கலீல் அஹமதுவின் இரண்டாவது ஓவரில் அதிரடியில் இறங்கினர். அதன் பின்னர் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசிக்கொண்டிருந்தனர். புவனேஷ்வர் குமார்,  கலீல் அஹமது, ஹர்திக் பாண்ட்யா, க்ருணல் பாண்ட்யா என அனைவரின் ஓவர்களிலும் பாரபட்சம் இன்றி இந்த இணை ரன்களை விளாசியது.

நியூஸிலாந்து

ஆரம்பத்தில் பொறுமையாக ஆடிக்கொண்டிருந்த டிம் செய்பெர்ட் அதிரடியில் மிரட்டினார். அவர் 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன்பின் பேட்டை வேகமாக சுழற்ற ஆரம்பித்தார். 8 ஓவர்களில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 86 ரன்களைக் கடந்தது. அதிரடியில் மிரட்டிக்கொண்டிருந்த இந்த ஜோடியை க்ருணல் பாண்ட்யா பிரித்தார். இவரது பந்து வீச்சில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து காலின் முன்றோ வெளியேறினார். அவர் 20 பந்துகளில் 34 ரன்களை எடுத்திருந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்ஸன் அதிரடியில் மிரட்டினார்.  

புவனேஷ்வர் குமார்

இந்தியப் பந்துவீச்சாளர்களை அச்சுறுத்திக்கொண்டிருந்த  டிம் செய்பெர்ட் 84 ரன்களில் கலீல் அஹமது பந்துவீச்சில் போல்ட் ஆனார். கலீல் ஓவரில் அதிரடியை ஆரம்பித்தனர். அவரது பந்துவீச்சிலே வீழ்ந்தார், மிச்செல் வந்த வேகத்தில் நடையைக்கட்ட ராஸ் டெய்லர் அதிரடியில் இறங்கினார். இதற்கிடையில் சாஹல் பந்துவீச்சில் வில்லியம்ஸன் அவுட்டானார். ராஸ் டெய்லரை புவனேஷ்வர் குமார் காலிசெய்தார். இருப்பினும் டெய்ல் எண்டர்கள் அதிரடியில் மிரட்ட நியூஸிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்து. இந்திய அணியின் தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளும், க்ருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், சஹால், கலீல் அஹமது தலா ஒரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். நியூஸிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டிம் செய்ஃபெர்ட் 84 ரன்கள் எடுத்தார். இந்திய அணிக்கு 220 ரன்கள் இலக்காக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்

கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்திய அணி சர்வதேச டி20 போட்டியில் 200 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுப்பது இதுவே முதல்முறை. இதற்கு முன்பாக கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டில் நடந்த போட்டியில் இந்திய அணிக்கெதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 245 ரன்கள் குவித்திருந்தது.