டி20 போட்டியில் இந்திய அணிக்கு மோசமான தோல்வி! - 80 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி | Newzealand Won 1st T-20 Against India

வெளியிடப்பட்ட நேரம்: 15:58 (06/02/2019)

கடைசி தொடர்பு:16:10 (06/02/2019)

டி20 போட்டியில் இந்திய அணிக்கு மோசமான தோல்வி! - 80 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி

இந்திய அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில், நியூஸிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நியூஸிலாந்து

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். அதன்படி,  டிம் செய்பெர்ட் - காலின் முன்றோ ஆகியோர் நியூஸிலாந்து இன்னிங்ஸைத் தொடங்கினர். கலீல் அஹமதுவின் இரண்டாவது ஓவரில் அதிரடியில் இறங்கிய இந்த ஜோடி, சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசிக்கொண்டிருந்தனர்.  புவனேஷ்வர் குமார்,  கலீல் அஹமது, ஹர்திக் பாண்ட்யா, க்ருணல் பாண்ட்யா என அனைவரின் ஓவர்களிலும் பாரபட்சமின்றி இந்த இணை, ரன்களை விளாசியது. 8 ஓவர்களில், அந்த அணி விக்கெட் இழப்பின்றி 86 ரன்களைக் கடந்தது. அதிரடியில் மிரட்டிக்கொண்டிருந்த இந்த ஜோடியை க்ருணல் பாண்ட்யா பிரித்தார். இவரது பந்து வீச்சில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து, காலின் முன்றோ வெளியேறினார். அவர், 20 பந்துகளில் 34 ரன்களை எடுத்திருந்தார். 

கிரிக்கெட்

அடுத்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்ஸன் அதிரடியில் மிரட்டினார். இந்தியப் பந்துவீச்சாளர்களை அச்சுறுத்திக்கொண்டிருந்த டிம் செய்பெர்ட், 84 ரன்களில் கலீல் அகமது பந்துவீச்சில் போல்ட் ஆனார். மிச்செல், வந்த வேகத்தில் நடையைக்கட்ட, ராஸ் டெய்லர் அதிரடியில் இறங்கினார். இதற்கிடையில், சாஹல் பந்துவீச்சில் வில்லியம்ஸன் அவுட்டானார். ராஸ் டெய்லரை புவனேஷ்வர் குமார் காலிசெய்தார். இருப்பினும், டெய்ல் எண்டர்கள் அதிரடியில் மிரட்ட, நியூஸிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இந்தியா

இதையடுத்து, இந்தியாவின் இன்னிங்ஸை ரோஹித் சர்மாவும்- தவானும் தொடங்கினார்கள். 1 ரன் எடுத்த நிலையில், ரோஹித் ஷர்மா மூன்றாவது ஓவரில் நடையைக்கட்டினார். இதையடுத்து, தமிழக வீரர் விஜய் சங்கர் களமிறங்கினார்.  அதிரடியில் மிரட்டிக்கொண்டிருந்த தவான், 29 ரன்கள் எடுத்த நிலையில்,  பெர்குசன் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். இளம் வீரர் பண்ட் ஏமாற்றமளித்தார். சாண்ட்னர், பந்துவீச்சில் போல்டானார். அதேஓவரில்  27 ரன்கள் எடுத்த நிலையில், விஜய்சங்கரும் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

நியூஸிலாந்தின் ஃபீல்டிங் அபாரமாக இருந்தது. அவர்கள், இந்திய வீரர்களுக்கு வாய்ப்பே வழங்கவில்லை. ஒவ்வொரு பந்தையும் வீண்செய்யும்போது, இந்திய வீரர்களுக்கு அழுத்தம் அதிகரித்தது. சுழற்பந்துவீச்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் கேட்ச், போல்ட் என விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். இந்திய அணியில் 8 பேட்ஸ்மேன்கள் இருந்தும் ரன்குவிக்க முடியவில்லை.

நியூஸிலாந்து

நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள், கடைசி வரை தங்களது பிடியைத் தளர்த்தவே இல்லை. தோனியும் - க்ருணால் பாண்ட்யாவும்  வெற்றிக்காகப் போராடினர்.  20 ரன்கள் எடுத்த நிலையில், பாண்ட்யா கேட்ச் கொடுத்து அவுட்டானார். தோனி - பாண்ட்யா இணை 50 ரன்கள் திரட்டியது. சிறிதுநேரத்தில் தோனியும் 39 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேற, இந்தியாவின் தோல்வி உறுதியானது. இந்திய அணி 19.2 ஓவர்களில் 139  ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. நியூஸிலாந்து அணி,  80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக தோனி 39  ரன்கள் எடுத்தார். நியூஸிலாந்து தரப்பில் டிம் சவுதி 3 விக்கெட்டுகளும், சோதி, மிட்செல் சான்ட்னெர்,லோக்கி பெர்குசன் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 3 போட்டிகள்கொண்ட டி-20 தொடரில் நியூஸிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. சர்வதேச டி20 போட்டிகளைப் பொறுத்தவரை, ரன்கள் அடிப்படையில் இந்திய அணிக்கு இதுவே மோசமான தோல்வி. இதற்கு முன்னதாக, கடந்த 2010ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், 47 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியைச் சந்திந்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.