`11ல் 10 பேர் ரன் கணக்கையே தொடங்கவில்லை!’ - 10 ரன்களில் ஆல் அவுட்டான ஆஸ்திரேலிய மகளிர் அணி | Australia's SA women team all out by 10 runs in domestic cricket

வெளியிடப்பட்ட நேரம்: 18:50 (06/02/2019)

கடைசி தொடர்பு:18:50 (06/02/2019)

`11ல் 10 பேர் ரன் கணக்கையே தொடங்கவில்லை!’ - 10 ரன்களில் ஆல் அவுட்டான ஆஸ்திரேலிய மகளிர் அணி

ஆஸ்திரேலிய உள்ளூர் மகளிர் கிரிக்கெட் தொடரில், சவுத் ஆஸ்திரேலியா அணியை நியூ சவுத் வேல்ஸ் அணி, 10 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. 

நியூ சவுத் வேல்ஸ் அணியின் வான் வீன்

Photo Credit: Twitter/@CAPathway

ஆஸ்திரேலியாவில், மகளிர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில், ஆல்ப்ரெச்ட் ஓவல் மைதானத்தில் சவுத் ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத்வேல்ஸ் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற சவுத் ஆஸ்திரேலியா மகளிர் அணி, பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. பேட்டிங்கைத் தேர்வுசெய்த சவுத் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. 

நியூ சவுத் வேல்ஸ் பந்துவீச்சில் சவுத் ஆஸ்திரேலிய அணி வீராங்கனைகள், அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். முடிவில், அந்த அணி 10.2 ஓவர்களில் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க வீராங்கனை மன்சல், 4 ரன்கள் எடுத்தார். அவரைத் தவிர மற்ற எவரும் தங்களது ரன் கணக்கைத் தொடங்கவே இல்லை. அதேபோல, மான்சல்,வானிகி கிபுமா மர் ஆகியோர் மட்டுமே 3 பந்துகளுக்கு அதிகமாக எதிர்க்கொண்டனர். எக்ஸ்ட்ராஸ் கணக்கில் 6 ரன்கள் வராவிட்டால், சவுத் ஆஸ்திரேலியா 4 ரன்களை மட்டுமே எடுத்திருக்கும். அந்த 6 ரன்களுமே நியூ சவுத் வேல்ஸ் அணியினர், வொய்ட் முறையில் எக்ஸ்ட்ராவாகக் கொடுத்தவை. நியூ சவுத் வேல்ஸ் தரப்பில் ரக்ஸேன் வான் வீன் 2 ஓவர்கள் பந்துவீசி, ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜூலி முரி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஆல்ப்ரெச்ட் ஓவல் மைதானம்

அதேபோல, அந்தப் போட்டியில் 2 பந்துகள் மட்டுமே வீசிய நவோமி உட்ஸ், அந்த இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். சவுத் ஆஸ்திரேலியா அணியின் 6 பேர் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தனர். மேலும், இரண்டு பேர் எல்.பி.டபிள்யூ முறையில் வெளியேறினர்.

11 ரன்கள் என்ற எளிமையான இலக்குடன் களமிறங்கிய நியூ சவுத் வேல்ஸ் அணி, 2.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. பேட்டிங்கில் 4 ரன்கள் சேர்த்த மன்சல், பௌலிங்கிலும் அசத்தினார். நியூ சவுத் வேல்ஸ் அணியின் 2 விக்கெட்டுகளையும் அவரே வீழ்த்தியிருந்தார்.