``அவங்க ரெண்டு பேர் வரிசைல நானும் இருப்பது மகிழ்ச்சி!’’ - பி.வி.சிந்து | P.V Sindhu was in Chennai to launch mission sports app

வெளியிடப்பட்ட நேரம்: 07:27 (08/02/2019)

கடைசி தொடர்பு:07:28 (08/02/2019)

``அவங்க ரெண்டு பேர் வரிசைல நானும் இருப்பது மகிழ்ச்சி!’’ - பி.வி.சிந்து

``எவ்வளவு சம்பளம் வாங்குவார் என்று கூட சிந்துவுக்குத் தெரியாது. ஆனால்... ” சிந்துவின் அப்பா ஓபன் டாக்

``அவங்க ரெண்டு பேர் வரிசைல நானும் இருப்பது மகிழ்ச்சி!’’ - பி.வி.சிந்து

``2019 உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வெல்வேன்” என பி.வி சிந்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2012 ரியோ ஒலிம்பிக்லில் வெள்ளிப் பதக்கம், தர வரிசையில் முன்னேற்றம் எனத் தொடர்ந்து பேட்மின்டனில் தனக்கான ஓர் இடத்தைப் பதித்தவர் சிந்து. தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்னை வந்திருந்த அவர், 2020 டோக்யோ ஒலிம்பிக்ஸ், உலக சாம்பியன்ஷிப் என அடுத்த திட்டங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

சிந்து

2018-ம் ஆண்டின் இறுதித் தொடரான, பி.டபிள்யூ.எஃப் வேர்ல்டு டூர் ஃபைனல்ஸில் தங்கம் வென்ற சிந்து, தொடர்ந்து இரண்டாம் இடம் பிடித்து வந்ததற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இப்போது மார்ச் மாதம் நடைபெறும் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடருக்குத் தயாராகி வருகிறார். சாம்பியன்ஷிப் தொடர்களில், சிந்துவுக்கு டஃப் கொடுப்பது ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கரோலினா மரின். ஜனவரி மாதம் நடைபெற்ற இந்தோனேசிய மாஸ்டர்ஸ் போட்டியில் விளையாடிய மரின், இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். சாய்னா நேவாலுடன் மோதிய இறுதிப் போட்டியின் போது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால், போட்டியின் பாதியிலேயே கரோலினா மரின் வெளியேறினார்.

இதனால், இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடரில் அவர் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. இதுகுறித்து பேசிய சிந்து, ``காயங்கள் ஆபத்தானது. போட்டியில் பங்கேற்க முடியாத நிலை, மிகுந்த வருத்தத்தை அளிக்கும். கரோலினா விரைவில் உடல்நலம் சரியாகி வர வேண்டும். இங்கிலாந்து சாம்பியன்ஷிப்பில் மற்ற டாப் வீராங்கனைகளை எதிர்கொள்வது சவாலாகவே இருக்கும்" என்றார்.

இந்த ஆண்டு நடைபெறும் பேட்மின்டன் தொடர்களில் சிறப்பாக விளையாடுவது 2020 ஒலிம்பிக் தொடருக்கான முன்னோட்டமாக அமையும். தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வரும் சிந்து, ``டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாட வேண்டும். தங்கம் வெல்வது எளிதல்ல. உலகின் சிறந்த வீராங்கனைகளை வென்று வர வேண்டும். அதற்கு மனதளவிலும், உடலளவிலும் ஃபிட்டாக இருக்க வேண்டியது அவசியம்" என்றார்.

பேட்மின்டன் தர வரிசையில் முன்னேற்றமடைந்தது மட்டுமன்றி, இந்தியாவின் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பட்டியலிலும் சிந்து முன்னேற்றம் கண்டுள்ளார். இதுகுறித்து பேசிய சிந்து, ``விளையாட்டுத் துறையில் இந்தியப் பெண்கள் சாதித்து வருகின்றனர். சானியா மிர்சா, சாய்னா நேவால் ஆகியோர் எனக்கு முன்பே விளையாட்டுத் துறையில் சாதித்தவர்கள். இந்தப் பட்டியலில் நானும் இணைந்திருப்பது மகிழ்ச்சி. விளையாட்டில் மட்டுமே முழு கவனம் செலுத்துகிறேன்" என்றார்.

மிஷன் ஸ்போர்ட்ஸ்

இளம் வயதிலேயே விளையாட்டுத் துறையில் உச்சம் தொட்ட சிந்து, சம்பளம் குறித்து பெரிதாகக் கண்டுகொள்வதில்லை என அவரது தந்தை பி.வி ரமணா தெரிவித்தார். ``எவ்வளவு சம்பளம் வாங்குவோம் என்று கூட சிந்துவுக்குத் தெரியாது. அவரை  பொறுத்தவரை, சிறப்பாக விளையாட வேண்டும். பதக்கங்களை அள்ள வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்திருப்பார்" என்றார் ரமணா. 

மிஷன் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் ஆப் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிந்து, மிஷன் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதராக அறிவிக்கப்பட்டார். டெக்னாலஜி வளர்ந்து வரும் இந்தக் காலகட்டத்தில், விளையாட்டுகள் குறைந்து வருகின்றன. போதுமான உடற்பயிற்சிகள் இல்லாதது, உடல் நலப் பாதிப்புகள் அதிகரிக்கக் காரணமாகின்றது என ஆய்வுகளின் முடிவுகள் அதிர்ச்சியளிக்கின்றன. இந்நிலையை மாற்ற, அன்றாட வாழ்க்கையில் விளையாட்டுகளை வழக்கமாக்கிக் கொள்வது அவசியம். அதற்குத் தேவையான திட்டமிடல்களைக் கொண்டுள்ளது மிஷன் ஸ்போர்ட்ஸ் ஆப். இந்த ஆப் மூலம், பள்ளிக் குழந்தைகளின் விளையாட்டுப் பயிற்சிகளை மானிடர் செய்ய முடியும். விளையாட்டை வழக்கமாக்கிக் கொள்ள முடியும். ரிமைண்டர், திட்டமிடல், பயிற்சி குறிப்புகள் எனப் பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது. ``கல்வியைப் போல விளையாட்டும் மிக முக்கியமானது. விளையாட்டுப் பயிற்சிகளை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும், முறையாகப் பின்பற்ற வேண்டும்" என்றார் சிந்து. பிரபல கிரிக்கெட் வீரர் முரளி விஜய் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரிடம் கேள்வி கேட்க அனுமதிக்கவில்லை.


டிரெண்டிங் @ விகடன்