4 நோ பால்கள்; 3 பவுண்டரிகள் - ஒரே பந்தில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்த ஆஸ்திரேலிய பௌலர்! | HH bowler Riley Meredith concedes 17 runs in one ball in a BBL match

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (07/02/2019)

கடைசி தொடர்பு:07:01 (08/02/2019)

4 நோ பால்கள்; 3 பவுண்டரிகள் - ஒரே பந்தில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்த ஆஸ்திரேலிய பௌலர்!

ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் லீக் டி20 தொடரில் ஹோபார்ட் ஹரிக்கேன்ஸ் பந்துவீச்சாளர் ரைலி மெரிடித் வீசிய ஒரே பந்தில் 17 ரன்கள் எடுக்கப்பட்டது. 

ரைலி மெரிடித்

Photo Credit: Twitter/@BBL

பிக்பேஷ் தொடரின் லீக் போட்டி ஒன்றில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் - ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரெனிகேட்ஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களமிறங்கிய ஹரிக்கேன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்தது. 184 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ரெனிகேட்ஸ் அணியால், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 16 ரன்கள் வித்தியாசத்தில் ஹரிக்கேன்ஸ் அணி வெற்றிபெற்றது. 

ஹோபார்ட்ஸ் ஹரிக்கேன் வீரர்கள்


இந்தப் போட்டியின் ரெனிகேட்ஸ் அணி சேசிங்கைத் தொடங்கியபோது, ஹரிக்கேன்ஸ் அணி வீரர் ரைலி மெர்டித் முதல் ஓவரை வீசினார். முதல் மூன்று பந்துகளை சிறப்பாக வீசிய மெர்டித், ஒரு ரன் மட்டுமே கொடுத்தார். நான்காவது பந்தை ரெனிகேட்ஸ் அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் எதிர்கொண்டார். அந்தப் பந்தை மெர்டித் நோ பாலாக வீசவே, ஃப்ரீ ஹிட் கொடுக்கப்பட்டது. ஃப்ரீ ஹிட் பந்தை அவர் வொய்டாக வீச, அது கீப்பரின் கைகளுக்குச் சிக்காமல் பவுண்டரிக்குச் சென்றது. மூன்றாவதாக அவர் வீசிய பந்தும் நோபாலாக, அந்த பந்து பின்சின் பேட்டின் இன்சைட் எட்ஜாகி ஃபைன் லெக் திசையில் பவுண்டரிக்குச் சென்றது. நான்காவது பந்தையும் மெர்டித் நோபாலாக வீச, அதை லாங்க் ஆஃப் திசையில் பின்ச் பவுண்டரியாக்கினார். இதையடுத்து, ஐந்தாவது முறையாக அவர் வீசிய பந்தில் பின்ச் ஒரு ரன் எடுத்தார். இதன்மூலம் மெர்டித் வீசிய நான்காவது பந்தில் மட்டும் 3 பவுண்டரிகள் உட்பட 17 ரன்கள் எடுக்கப்பட்டது. அவர் வீசிய முதல் ஓவரில் மொத்தம் 23 ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்தப் போட்டியில் 3 ஓவர்கள் பந்துவீசிய மெர்டித், 43 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.