டி-20 கிரிக்கெட்டில் ரோஹித் ராஜ்ஜியம்! - நியூஸிலாந்தில் முதல் வெற்றியை ருசித்தது இந்தியா | Rohit sharma is now the leading run scorer in T20Is

வெளியிடப்பட்ட நேரம்: 18:13 (08/02/2019)

கடைசி தொடர்பு:18:13 (08/02/2019)

டி-20 கிரிக்கெட்டில் ரோஹித் ராஜ்ஜியம்! - நியூஸிலாந்தில் முதல் வெற்றியை ருசித்தது இந்தியா

ரோஹித் ஷர்மா

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டி, ஆக்லாந்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதன்படி  டிம் செய்பெர்ட் - காலின் முன்றோ நியூஸிலாந்து இன்னிங்ஸைத் தொடங்கினர்.

கிரிக்கெட்

கடந்த போட்டியில் மிரட்டிய இந்தக் கூட்டணி, இன்றைய ஆட்டத்திலும் மிரட்டுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. முதல் 2 ஓவர்களில் நிதானம் காட்டிய இந்த ஜோடி, புவனேஷ்வர்குமார் வீசிய மூன்றாவது ஓவரில் அதிரடியை காட்டத் தொடங்கியது. டிம் செய்பெர்ட் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். தொடர்ந்து, அடுத்த பந்தை சிக்ஸருக்குத் தூக்கினார். ஆனால், புவனேஷ்வர்குமாரின் அடுத்த பந்திலே விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். க்ருணல் பாண்ட்யா, தனது முதல் ஓவரிலே இரட்டை செக் வைத்தார். அவரது ஓவரில் இரண்டாவது பந்தில் ரோஹித் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து, காலின் முன்றோ அவுட்டானார். அதே ஓவரின் கடைசி பந்தில் மிட்செல்லை  காலிசெய்தார். இதனால், நியூஸிலாந்து அணி 6 ஓவர்களில் 43 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

க்ருணால் பாண்ட்யா

சுழற்பந்து வீச்சில் விக்கெட்டுகள் வீழ்ந்ததால், சாஹல் மூலம் மேலும் நெருக்கடி கொடுக்க ரோஹித் முடிவுசெய்தார். இதனால் வில்லியம்ஸன் - ராஸ் டெய்லர் நிதானமாக ஆடினர்.  ஆனால் க்ருணல் பாண்ட்யா, தனது அடுத்த ஓவரில் வில்லியம்ஸனை காலி செய்தார். 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வில்லியம்ஸன் எல்.பி.டபிள்யூ  முறையில் அவுட்டானார். இன்றைய போட்டியில், இந்திய பந்துவீச்சாளர்கள் கச்சிதமாகப் பந்துவீசினார்கள். மிட்செல் , கிராண்ட்ஹோம் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினார். நிதானமாக விளையாடிய இவர்கள், ரன்களைச் சேர்த்தனர். சிறிதுநேரம் இந்தக் கூட்டணி மிரட்டியது. அதிரடியாக விளையாடிய கிராண்ட்ஹோம் அரை சதம் கடந்தார். ஆனால், அடுத்த பந்திலே ரோகித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கலீல் அஹமது இறுதி ஓவரில் சாண்ட்னெர், டிம் சவுதி ஆகியோரை போல்ட் ஆகி அட்டகாசப்படுத்தினார். 20 ஓவர் முடிவில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.

நியூஸிலாந்து


இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா - தவான் கூட்டணி அட்டகாசமான தொடக்கத்தைக் கொடுத்தனர். முதல் இரண்டு ஓவர்களில் நிதானம் காட்டிய ரோஹித், பெர்குசனின் மூன்றாவது ஓவரில் சிக்ஸர் அடித்து அட்டகாசப்படுத்தினார். ஸ்காட் குஜ்ஜெலிஜின் அடுத்த ஓவரில் சிக்ஸர், பவுண்டரிகள் என விளாசிய ஹிட் மேன்  டி-20-யில் தனது 100-வது சிக்ஸரை அடித்தார். தவான், ரோஹித் ஷர்மாவுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய ரோஹித் சர்மா, அரை சதம் கடந்தார். ஆனால், அடுத்த ஓவரிலே அவுட்டாகி வெளியேறினார். சிறிது நேரத்தில் தவானும் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ரிஷப் பண்ட் - விஜய் சங்கர் கூட்டணி அமைத்தனர்.

சிக்ஸர்

ரிஷப் பண்ட் நிதானமாக ரன் குவிக்க, விஜய் சங்கர் அதிரடி காட்ட முயன்றார். மிட்செல் ஓவரில் சிக்ஸர் விளாசிய விஜய் சங்கர், அடுத்த பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து தோனியும் ரிஷப் பண்டும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றனர். இந்திய அணி 18.5 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்து  7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ரிஷப் பண்ட் (40), தோனி ( 20) ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர். இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

தோனி


இந்தப் போட்டியில், ரோஹித் ஷர்மா பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார். டி-20 கிரிக்கெட் போட்டியில் 102 சிக்ஸர்கள் விளாசி ரோஹித் அசத்தியுள்ளார். டி-20 போட்டியில், 100 சிக்ஸர்களை விளாசிய மூன்றாவது வீரர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். மேலும், சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர், 96 போட்டிகள் 2,288 ரன்கள் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக மார்டின் கப்தில் உள்ளார்.