`இந்தியாவே கேட்கும் அளவுக்கு நிலைமையை உருவாக்குவோம்!' - அதிர்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் இயக்குநர் | Let's Make India Want To Play Pakistan Says Pakistan Board Official

வெளியிடப்பட்ட நேரம்: 11:06 (12/02/2019)

கடைசி தொடர்பு:11:13 (12/02/2019)

`இந்தியாவே கேட்கும் அளவுக்கு நிலைமையை உருவாக்குவோம்!' - அதிர்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் இயக்குநர்

``இந்தியாவையே பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட விரும்புகிறோம் எனக் கேட்க வைப்போம்'' என அந்நாட்டு கிரிக்கெட் போர்டின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா

மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுடன் விளையாடுவதைத் தவிர்த்து வருகிறது. ஐசிசி ஏற்பாடு செய்யும் தொடர்களில் மட்டுமே பாகிஸ்தான் அணியுடன் விளையாடி வருகிறது. இதனால் இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்படுவது வழக்கமாகி வருகின்றன. ``பி.சி.சி.ஐ செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி இந்திய அணி விளையாட வராததால் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, நஷ்டஈடு வேண்டும்" எனக் கூறி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமான பி.சி.பி ஐ.சி.சி-யை அணுகியது. ஆனால், இந்த வழக்கில் பி.சி.சி.ஐ-க்கு ஆதரவாகத் தீர்ப்பு வர பி.சி.பி-க்கு பின்னடைவு ஏற்பட்டது. 

பாகிஸ்தான்

இருப்பினும் இந்திய அணி பாகிஸ்தானுடன்  கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் எனத் தொடர்ந்து போர்க்கொடி தூக்கிக்கொண்டு இருக்கிறது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். இந்த நிலையில், இந்த விவகாரத்தில் தற்போது சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்துள்ளார் பி.சி.பி-யின் புதிய நிர்வாக இயக்குநரான வாசிம் கான். அவர் கூறுகையில், ``பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட விரும்புகிறோம் என இந்தியா கேட்கும் அளவுக்கு நிலைமைகளை பி.சி.பி உருவாக்கும். உருவாக்க வேண்டும். இது மிகப்பெரிய சவாலாகும். இருப்பினும் விரைவாக இந்த விஷயத்தில் தீர்வு எடுக்கப்படும் என நான் நினைக்கவில்லை. 

வாசிம் கான்

இந்தியாவில் தேர்தல் நடக்கவுள்ளது. அதனால் எதிர்காலத்தில் இது எதுவும் நடக்கப்போவதில்லை. இருப்பினும் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். தொடர்ந்து இந்தியாவை விளையாடும்படி கேட்டுக்கொண்டே இருக்கிறோம். இந்தியாவுக்கு எதிராக விளையாட முடியவில்லை என வருத்தத்துடன் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது. அதேநேரம் நாங்கள் முன்னோக்கிச் செல்ல வேண்டும். இந்தியா விளையாடும் எனக் காத்திருக்க முடியாது. எங்கள் நோக்கம் எல்லாம் பாகிஸ்தான் கிரிக்கெட்டை உயர்த்த வேண்டும். எங்கள் வீரர்களைச் சர்வதேச அளவுக்கு வளர்க்க வேண்டும்" எனக் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க