`இந்திய கால்பந்து அணி கேப்டன் ஆவேன்; உலகக் கோப்பையை வெல்வேன்!'- தேசிய சாம்பியன் பட்டம் வென்ற மாணவன் சபதம் | National football match: tamilnadu won championship who led by Karur Government School student

வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (12/02/2019)

கடைசி தொடர்பு:11:35 (12/02/2019)

`இந்திய கால்பந்து அணி கேப்டன் ஆவேன்; உலகக் கோப்பையை வெல்வேன்!'- தேசிய சாம்பியன் பட்டம் வென்ற மாணவன் சபதம்

கரூரைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர் ஒருவர் தலைமையிலான அணி தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று அசத்தி, தமிழகத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறது.

 தேசிய கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சிவபிரகாஷை பாராட்டும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரின் மகன் சிவபிரகாஷ் தலைமையிலான அணிதான் சாம்பியன் பட்டம் பெற்று, கால்பந்துப் போட்டியில் சாதித்திருக்கிறது. சாதாரண எலெக்ட்ரீஷியனான செல்வராஜின் மகன் சிவபிரகாஷ், பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தொடர்ந்து 5 முறை மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 5-வது முறையாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜோலார்பேட்டையில் நடைபெற்ற மாநில கால்பந்துப் போட்டியில் பங்கேற்று, சாம்பியன் பட்டம் வென்றார். தொடர்ந்து கோயமுத்தூரில் சில மாதங்களுக்கு தனியார் கால்பந்து கழகம் நடத்திய 17 வயதுக்குட்டோருக்கான கால்பந்து தேர்வு போட்டியில் வெற்றி பெற்றார்.

அதோடு, சிறப்பாக செயல்பட்டதால், தமிழக அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, தனியார் கால்பந்து கழகம் ஒன்று ஆந்திர மாநிலம் திருப்பதியில் 17 வயதுக்குட்பட்ட 19-வது தேசிய அளவிலான கால்பந்து போட்டியை நடத்தியது. மொத்தம் எட்டு மாநில அணிகள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், சிவபிரகாஷ் தலைமையிலான அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனால், உத்தரப்பிரதேசத்தில் நடைபெற இருக்கிற சர்வதேச கால்பந்துப் போட்டியில் பங்கேற்க சிவபிரகாஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிவபிரகாஷ்

இது குறித்து, சிவபிரகாஷிடம் பேசினோம். ``நான் ஏழ்மையான குடும்பப் பின்னணியைக் கொண்டவன். சின்ன வயதில் இருந்தே கால்பந்து மேல அப்படி ஒரு ஆர்வம். ஆனா, அதை வீட்டுலயும் சரி, பள்ளிக்கூடத்திலும் சரி ஆரம்பத்துல ஆதரிக்கலை. பள்ளியில் எல்லோரும் கிரிக்கெட், வாலிபால்ன்னுதான் விளையாடுவாங்க. கால்பந்து விளையாட யாரும் வரமாட்டாங்க. நான் மட்டும் கால்பந்தை வச்சு விளையாண்டுக்கிட்டு இருப்பேன். கால்பந்து விளையாடும் வேறு பள்ளி மாணவர்களை தேடிப் போய், அவர்களோடு விளையாட முயற்சி பண்ணுவேன். அவங்களும் பல தடவை என்னை பந்து பொறுக்கிபோடுறவனா மட்டுமே வச்சுப்பாங்க. அந்த அவமானங்களை மனதில் வைராக்கியமா மாத்திக்கிட்டேன்.

`கால்பந்து போட்டியில் சாதிக்காம விடமாட்டேன். இன்னைக்கு இதை கண்டுக்காத இந்த சமூகம், பிறகு என்னைப் பத்தியே பேச வைக்கணும்'னு முடிவு பண்ணி உழைச்சேன். நான் கொஞ்சம் கொஞ்சமா போட்டிகளில் ஜெயிக்கவும், பள்ளியில் என்னை ஊக்கப்படுத்தினாங்க. வீட்டுலயும் என்னை தட்டிக் கொடுத்தாங்க. இன்னைக்கு தேசிய அளவிலான போட்டியில் என் தலைமையில் தமிழக அணியை ஜெயிக்க வச்சுருக்கேன். என்னை தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அழைத்து பாராட்டியதோடு, ஊக்கத்தொகையும் கொடுத்தார். ஒருநாள் இந்திய அணியில் இடம் பிடிப்பேன். அங்கும் என் தலைமையில் அணியை வழிநடத்தி, உலக சாம்பியனாக இந்திய அணியை வெற்றி பெற வைப்பேன்" என்றார் உணர்ச்சி மேலிட!