`எச்சரிக்கிறேன் வீரு பாய்' - `பேபி சிட்டர்' விளம்பரத்தால் கடுப்பான மேத்யூ ஹெய்டன்! #ViralVideo | Matthew Hayden reacts to Sehwag's babysitting ad

வெளியிடப்பட்ட நேரம்: 15:08 (12/02/2019)

கடைசி தொடர்பு:15:19 (12/02/2019)

`எச்சரிக்கிறேன் வீரு பாய்' - `பேபி சிட்டர்' விளம்பரத்தால் கடுப்பான மேத்யூ ஹெய்டன்! #ViralVideo

சமீபத்தில் நடந்த இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது. இரு அணி வீரர்கள் இடையேயான ஸ்லெட்ஜிங் போட்டிகளின் போது அதிக கவனம் பெற்றது. அதிலும் குறிப்பாக இந்திய வீரர் ரிஷப் பன்ட் அதிக கவனம் பெற்றார். அதற்குக் காரணம், மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பன்ட் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது தோனி அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிட்ட ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், ``நீங்கள் என் குழந்தையைக் கவனித்துக்கொண்டால், நான் என் மனைவியுடன் சினிமாவுக்குச் சென்றுவருவேன்" என்று சீண்டினார்.

ஷேவாக்

இதற்குப் பதிலடிகொடுத்த பன்ட், `தற்காலிக கேப்டன் குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இவர் செய்வதெல்லாம் பேசுவது... பேசுவது... பேசிக்கொண்டே இருப்பது; இதை மட்டும்தான் அவர் செய்துகொண்டிருக்கிறார்’’ என்று பேசினார். தொடர்ந்து கிரிக்கெட் தொடர் முடிவதற்கு முன்பாகவே, டிம் பெய்ன் கேட்டுக்கொண்டதுபோல், அவரது குழந்தைகளைச் சந்தித்தார் ரிஷப். இதை, பெய்னின் மனைவி பாம் பெய்ன் குழந்தைகளுடன், ரிஷப் பன்ட் சிரித்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ``சிறந்த பேபி சிட்டர் ரிஷப் பன்ட்” என்று குறிப்பிட்டு ஸ்டேட்டஸ் ஆக பதிவிட்டார். 

இதெல்லாம் வைரலாகத் தற்போது இந்த ``பேபி சிட்டர்'' விஷயத்தை வைத்து விளம்பரப் படம் ஒன்று தயாராகியுள்ளது. ஆஸ்திரேலிய அணி வரும் 24ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. அவர்களை வரவேற்கும் விதமாக இந்தப் போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம்தான் இந்த `பேபி சிட்டர்'' விளம்பரத்தை எடுத்துள்ளது. இதில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் நடித்துள்ளார். இதில் ``ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பேபி சிட்டர் தேவை. இது இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு நன்றாகத் தெரியும்" என ஆஸ்திரேலிய வீரர்களைக் கிண்டலடிக்கும் வகையில் அமைந்துள்ள வீடியோவைப் பார்த்த அந்த அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் ஷேவாக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

மேத்யூ ஹெய்டன்

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,``உங்களை எச்சரிக்கிறேன். ஆஸ்திரேலியர்களை ஒருபோதும் நகைச்சுவையாக எடுக்காதீர்கள் வீரு பாய். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் உலகக்கோப்பை யாரிடம் இருக்கிறது" என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் தற்போது மீண்டும் ``பேபி சிட்டர்'' விஷயம் இந்தியா - ஆஸ்திரேலியா தொடரில் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க