என்னால் சிக்ஸர் அடிக்க முடியும் என்று நம்பினேன்!’ - ஹாமில்டன் டி20 சர்ச்சைக்கு தினேஷ் கார்த்திக் விளக்கம் | Dinesh Karthik responds to Hamilton controversy

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (14/02/2019)

கடைசி தொடர்பு:07:55 (14/02/2019)

  என்னால் சிக்ஸர் அடிக்க முடியும் என்று நம்பினேன்!’ - ஹாமில்டன் டி20 சர்ச்சைக்கு தினேஷ் கார்த்திக் விளக்கம்

நியூஸிலாந்து அணிக்கெதிரான 3-வது டி20 போட்டியின் கடைசி ஓவரில், சிங்கிள் எடுக்க ஓடாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் விளக்கம் அளித்திருக்கிறார்.

கிரிக்கெட்

ஹாமில்டன் மைதானத்தில் இந்தியா - நியூசிஸிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில், இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றிருந்த நிலையில், தொடரை நிர்ணயிக்கும் முக்கியமான போட்டியாக அது அமைந்தது.  அந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிஸிலாந்து அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, 16-வது ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. 

நியூஸிலாந்து

கடைசி 28 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையில் ஜோடி சேர்ந்த தினேஷ் கார்த்திக் - குர்ணால் பாண்ட்யா ஜோடி, அதிரடி காட்டியது. இதனால், கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இந்திய அணிக்கு ஏற்பட்டது. அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் ஒரு ரன் எடுப்பதை தினேஷ் கார்த்திக் தவிர்த்தார். அந்தப் போட்டியில், நியூஸிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. இதனால், தினேஷ் கார்த்திக் ஒரு ரன் எடுத்து குர்ணால் பாண்ட்யாவுக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கலாம் என்று கூறி சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது. குர்ணால் பாண்ட்யாவுடன் இணைந்து தினேஷ் கார்த்திக், 7-வது விக்கெட்டுக்கு 28 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார்.

சிக்ஸர்

இந்த விமர்சனத்துக்கு தினேஷ் கார்த்திக் தற்போது விளக்கமளித்திருக்கிறார். இதுகுறித்துப்பேசிய தினேஷ் கார்த்திக், ``ஹாமில்டன் டி20 போட்டியைப் பொறுத்தவரை கடினமான சூழலில் நானும் குர்ணால் பாண்ட்யாவும் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம் என்று நினைக்கிறேன்.  பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் ஏற்படும் அளவுக்கு அந்தப் போட்டியின் நிலையை நான் மாற்றினேன். 

தினேஷ் கார்த்திக்

என்னால் சிக்ஸர் அடிக்க முடியும் என்று நான் உறுதியாக நம்பினேன். அதனாலேயே கடைசி ஓவரில் சிங்கிள் எடுப்பதை நான் தவிர்த்தேன். அந்தச் சூழலைத் திறமையாக எதிர்கொள்ள முடியும் என்று நாங்கள் நம்பினோம். அதில் (சிங்கிள் எடுப்பதைத் தவிர்த்த பிறகு) என்னால் சிக்ஸர் அடிக்க முடியும் என்று உண்மையாக நான் நம்பினேன். ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக, கடினமான சூழல்களில் பெரிய அளவிலான ஷாட்களை நம்மால் அடிக்க முடியும் என்று நமது திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அதேபோல, உங்களது பாட்னர் மீதும் நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது முக்கியமானது. கிரிக்கெட் போட்டியில்  இதுபோன்ற சம்பவங்கள் நடப்பவைதான்’’ என்று தெரிவித்திருக்கிறார்.