கடைசி விக்கெட்டுக்கு 78 ரன்கள்! - ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி த்ரில் வெற்றி #SAvSL | Sri lanka wins first test against SA by thrilling one wicket

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (16/02/2019)

கடைசி தொடர்பு:22:30 (16/02/2019)

கடைசி விக்கெட்டுக்கு 78 ரன்கள்! - ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி த்ரில் வெற்றி #SAvSL

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டர்பன் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. 

இலங்கை வீரர் குஷால் பெரேரா

Photo Credit: ICC

தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி, 235 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் டிகாக் 80 ரன்கள் சேர்த்தார். இலங்கை அணி தரப்பில் விஸ்வா பெர்ணாண்டோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து, முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி, 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக குஷால் பெரேரா, 51 ரன்கள் சேர்த்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் ஸ்டெயின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, 259 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. கேப்டன் டூப்ளசிஸ் 90 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் பெர்ணாண்டோ 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தென்னாப்பிரிக்க அணி வீரர்கள்

Photo Credit: ICC

இதையடுத்து 304 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. ஒஷாடா பெர்னாண்டோ 28 ரன்களுடனும் குஷால் பெரேரா 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். முந்தைய நாள் ஸ்கோருடன் நான்காம் நாள் ஆட்டத்தை இலங்கை அணி தொடங்கியது. 4வது விக்கெட்டுக்கு பெர்னாண்டோ -பெரேரா ஜோடி 58 ரன்கள் சேர்ந்த நிலையில் பெர்னாண்டோ 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்துவந்த விக்கெட் கீப்பர் டிக்வல்லா, தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே ரன் கணக்கைத் தொடங்காமலேயே வெளியேறினார். இதனால், இலங்கை அணி 5 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. 

இலங்கை அணி வீரர்கள்

இந்த நிலையில், 6வது விக்கெட்டுக்கு குஷால் பெரேராவுடன் ஜோடி சேர்ந்த தனஞ்செய டிசெல்வா, அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த ஜோடி ஆறாவது விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்த நிலையில், டிசெல்வா 48 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த சுரங்கா லக்மல், அம்புல்டெனியா மற்றும் ரஜிதா ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்த இலங்கை அணி 226 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்து தடுமாறியது. மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குஷால் பெரேரா, 146 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

கடைசி விக்கெட் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், இலங்கை அணியின் வெற்றிக்கு 78 ரன்கள் தேவைப்பட்டது. வேகப்பந்து வீச்சாளர் விஸ்வா பெர்னாண்டோவுடன் கைகோத்த குஷால் பெரேரா, இலங்கை அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இந்த ஜோடியைப் பிரிக்க தென்னாப்பிரிக்க வீரர்கள் எடுத்த முயற்சி இறுதிவரை பலிக்கவே இல்லை. 85.3 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை இலங்கை அணி எட்டியது. குஷால் பெரேரா, ஆட்டமிழக்காமல் 153 ரன்கள் சேர்த்தார். அவருக்கு உறுதுணையாக களத்தில் நின்ற விஸ்வா பெர்னாண்டோ 27 பந்துகளைச் சந்தித்து 6 ரன்கள் எடுத்திருந்தார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை வெற்றிகரமான சேஸிங்கில் கடைசி விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இலங்கை அணியை வெற்றிபெற வைத்த குஷால் பெரேரா, ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.


[X] Close

[X] Close