15 சிக்ஸர்...7 பவுண்டரி.. 55 பந்துகளில் 147 ரன்கள்! - அட்டகாசப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர்  | Shreyas Iyer smashed his T20 career-best score of 147

வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (21/02/2019)

கடைசி தொடர்பு:18:31 (21/02/2019)

15 சிக்ஸர்...7 பவுண்டரி.. 55 பந்துகளில் 147 ரன்கள்! - அட்டகாசப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் 

 

ஸ்ரேயாஸ் ஐயர்

சையத் முஷ்டாக் அலி ட்ராபி டி-20 தொடரில், இந்தூரில் நடைபெற்ற போட்டியில், மும்பை மற்றும் சிக்கிம் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரஹானே, பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ரஹானே மற்றும் ப்ரித்வி ஷா இருவரும் விரைவில் அவுட்டாகி வெளியேறினர். இதன்பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் - சூர்ய குமார் யாதவ் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்தக் கூட்டணி சிக்கிம் பந்துவீச்சை நாலாபுறமும் விரட்டியது. சூர்ய குமார் யாதவ் நிதானமாக விளையாட, ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியில் களமிறங்கினார். சிக்கிம் பந்துவீச்சை ஸ்ரேயாஸ் ஐயர் துவம்சம்செய்தார். இவர், 38 பந்துகளில் சதமடித்தார். மறுமுனையில் நிதானமாக ஆடிய சூர்ய குமார் யாதவ், அரை சதம் கடந்தார்.

கிரிக்கெட்

இந்தக் கூட்டணி தொடர்ந்து அதிரடியில் மிரட்டியது. 147 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் அவுட்டாகி வெளியேறினார். ஸ்ரேயாஸ் களமிறங்கும்போது, மும்பை அணி 2 விக்கெட் இழப்புக்கு 22 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்ரேயாஸ் - சூர்யக்குமார் யாதவ் கூட்டணி 213 ரன்கள் எடுத்தது. 20 ஓவர் முடிவில், மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது.பின்னர் களமிறங்கிய சிக்கிம் அணியால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 104 ரன்களே எடுக்க முடிந்தது. இதன்மூலம், மும்பை அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

ஸ்ரேயாஸ் ஐயர் 55 பந்துகளில் 7 பவுண்டரி, 15 சிக்ஸர்களுடன் 147 ரன்களை எடுத்தார். இந்தப் போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்தார். சிக்கிம் பந்துவீச்சாளர் டாஷி பல்லாவின், ஒரே ஒவரில் 35 ரன்களைத் திரட்டினார். டி-20 போட்டியில் அதிக ரன்களைக் குவித்த இந்தியவீரர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற சாதனையும் இவர் புரிந்துள்ளார்.


[X] Close

[X] Close