`அரசு கேட்டுக்கொண்டால் ஒட்டுமொத்த உலகக்கோப்பை தொடரையே புறக்கணிப்போம்!’ - ரவி சாஸ்திரி | will stand by government, says Indian coach ravi shastri over India - pakistan world cup clash

வெளியிடப்பட்ட நேரம்: 15:54 (22/02/2019)

கடைசி தொடர்பு:15:54 (22/02/2019)

`அரசு கேட்டுக்கொண்டால் ஒட்டுமொத்த உலகக்கோப்பை தொடரையே புறக்கணிப்போம்!’ - ரவி சாஸ்திரி

'உலகக்கோப்பை தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய அரசு எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம்' என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருக்கிறார். 

ரவி சாஸ்திரி

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎஃப் படையைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன. தாக்குதலுக்குக் காரணமான ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பு, பாகிஸ்தான் ஆதரவுடன் இயங்கிவரும் அமைப்பாகும். இதனால், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 200 சதவிகிதம் சுங்க வரி விதிக்கப்பட்டிருக்கிறது. 

புல்வாமா தாக்குதல்

பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையின் ஒருபகுதியாக, உலகக்கோப்பை தொடரில் அந்நாட்டுக்கு எதிரான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் வலுத்துவருகிறது. மும்பையில் நடைபெற்றுவரும் பிசிசிஐ-யின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. 

இந்த நிலையில், பாகிஸ்தான் போட்டியைப் புறக்கணிப்பது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்திருக்கிறார். மிரர் நௌ தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ``அந்த முடிவு பிசிசிஐ மற்றும் அரசின் கைகளில் இருக்கிறது. என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியும். அதன் அடிப்படையில் அவர்கள் முடிவு எடுப்பார்கள்’’ என்று தெரிவித்தார். இந்திய அணி, உலககக்கோப்பை தொடரையே புறக்கணிக்குமா என்ற கேள்விக்கு, `உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டாம் என்று அரசு கூறும் நிலையில், அந்த முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்’’ என்று ரவி சாஸ்திரி பதிலளித்தார்.  

இந்தியா - பாகிஸ்தான் போட்டி


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்தில் வரும் மே மாதம் 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில், ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் வரும் ஜூன் 16-ம் தேதி நடைபெறும் போட்டியில், பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. இருநாடுகளுக்கிடையிலான எல்லைப் பிரச்னை காரணமாகப் பதற்றமான சூழல் நிலவிவருவதால், கடந்த 2012-13-க்குப் பின்னர் இருநாடுகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் நடைபெற இருக்கும் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானுக்கு இரண்டு இடங்களை ஒதுக்கி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டிருக்கிறது.  


[X] Close

[X] Close