ஐபிஎல் தொடக்கவிழா ரத்து! - செலவுத் தொகையை சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்க முடிவு | no IPL opening ceremony this year - bcci

வெளியிடப்பட்ட நேரம்: 18:26 (22/02/2019)

கடைசி தொடர்பு:18:26 (22/02/2019)

ஐபிஎல் தொடக்கவிழா ரத்து! - செலவுத் தொகையை சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்க முடிவு

பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுடன் தற்போது கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை. ஐபிஎல் தொடர்களிலும் பாகிஸ்தான் வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் உலகக்கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடிவருகின்றன. புல்வாமா தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து தீவிரவாதிகளுக்கு அடைக்கலம்கொடுக்கும் பாகிஸ்தானுடனான சுமுக உறவைத் துண்டிக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன. இந்திய அரசும் பொருளாதார ரீதியிலான சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. 

இந்நிலையில்தான், இந்தியா - பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடக் கூடாது என்ற கருத்து எழுந்துவருகிறது. உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடவில்லை என்றால், அது அந்த அணிக்குச் சாதமாக முடியும்; சில புள்ளிகள் அவர்களுக்குக் கிடைக்கும் பரவாயில்லை. இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் மோதும்  சூழல் ஏற்பட்டால், இந்தியா விளையாட வேண்டாம். அதனால், அவர்களுக்கு உலகக்கோப்பைகூட கிடைக்கட்டும் பரவாயில்லை என முன்னாள் இந்திய வீரர்கள், சிலர் கூறிவருகின்றனர். அரசு எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்றது பிசிசிஐ தெளிவாக.

வினோத் ராய்

இந்நிலையில்,டெல்லியில் இன்று பிசிசிஐ கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிர்வாகக் குழு உறுப்பினர் வினோத் ராய், “ இன்றைய கூட்டத்தில் இரு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. வீரர்களின் பாதுகாப்புகுறித்து சில கோரிக்கைகள் சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் கூறவுள்ளோம். எதிர்காலத்தில் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளிடம் கடுமையான உறவுகளைக்கொண்டிருக்க வேண்டும் என ஐசிசி-க்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க உள்ளோம். அதேபோல, இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் பிரமாண்ட தொடக்க விழா இருக்காது. அதற்குச் செலவாகும் தொகையை புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு அளிக்க முடிவெடுத்துள்ளோம்'' என்றார்.
 


[X] Close

[X] Close