`பாகிஸ்தானை இன்னொரு முறை தோற்கடிப்பதற்கான நேரம் இது!’ - சச்சின் காட்டம் | I personally hate to give them two points - Sachin Tendulkar over india pakistan clash in world cup

வெளியிடப்பட்ட நேரம்: 19:59 (22/02/2019)

கடைசி தொடர்பு:20:16 (22/02/2019)

`பாகிஸ்தானை இன்னொரு முறை தோற்கடிப்பதற்கான நேரம் இது!’ - சச்சின் காட்டம்

சச்சின் டெண்டுல்கர்

புல்வாமா தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஃஎப் வீரர்கள் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இது, பாகிஸ்தான் ஆதரவுடன் இயங்கிவரும் அமைப்பாகும். இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் தங்களது கண்டனத்தைப் பதிவுசெய்தது. இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிரான பொருளாதார தடை நடவடிக்கையை எடுத்துவருகிறது. இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய அளவிலான வரவேற்பு இருக்கிறது. தீவிரவாதத் தாக்குதல் காரணமாக இந்திய அணி, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2012-13-ம் ஆண்டுக்குப் பின்னர் விளையாடுவது இல்லை. ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே பங்கேற்றுவருகிறது.

புல்வாமா தாக்குதல்

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே ரசிகர்கள் வேறு ஒரு மனநிலைக்குச் சென்றுவிடுவார்கள். மற்ற நாடுகளுடன் நடைபெறும் போட்டிக்கு இல்லாத வரவேற்பு இதற்கு இருக்கும். இது ஒரு யுத்தம் போன்று பார்க்கப்படும். புல்வாமா தாக்குதல் நடந்திருக்கும் இந்த வேளையில், இனி இந்திய அணி பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியில் விளையாடக் கூடாது எனக் குரல்கள் ஒலித்துவருகின்றன. மே மாத இறுதியில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இருக்கிறது. இந்நிலையில், முன்னாள் வீரர்கள் சிலர், “நாம் பாகிஸ்தானுடன் விளையாடவில்லை என்றால், அவர்களுக்கு இரண்டு புள்ளிகள் கிடைக்கும். இறுதிப்போட்டிக்கு வந்தாலும் விளையாட வேண்டாம்; அவர்களே கோப்பையை எடுத்துச்செல்லட்டும்'' என்று கூறிவருகின்றனர்.

'மத்திய அரசு எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம்' என இந்தியக் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துவிட்டது.  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய அரசு எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம்' என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருக்கிறார். 

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி

இந்நிலையில், இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில்,``உலகக்கோப்பை தொடர்களில் இந்தியா எப்போதும் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. அவர்களை இன்னொரு முறை தோற்கடிப்பதற்கான நேரம் இது. உலகக்கோப்பை தொடரில் தேவையில்லாமல் அவர்களுக்கு இரண்டு புள்ளிகளை வழங்குவதை நான் வெறுக்கிறேன்.

அதேநேரம், எனக்கு எப்போதும் இந்தியா முன்னிலையில் இருக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். என் நாடு என்ன முடிவு எடுக்கிறதோ முழுமனதோடு ஏற்றுக்கொள்வேன்’’ எனப் பதிவிட்டுள்ளார்.


[X] Close

[X] Close