`அரசியல் லாபத்துக்காக விளையாட்டை குறிவைக்காதீர்கள்!’ - பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது | Don't target cricket for political gains, says Pak captain sarfraz Ahmed

வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (22/02/2019)

கடைசி தொடர்பு:21:20 (22/02/2019)

`அரசியல் லாபத்துக்காக விளையாட்டை குறிவைக்காதீர்கள்!’ - பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது

'உலகக்கோப்பை தொடரில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி நடத்தப்பட வேண்டும்' என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது கருத்து தெரிவித்திருக்கிறார்.

சர்ஃப்ராஸ் அகமது

'புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர், உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்தியா தவிர்க்க வேண்டும்' என்ற குரல் வலுத்துவருகிறது. அந்தப் போட்டியைத் தவிர்க்க வேண்டும் என்ற வாதத்துக்கு ஆதரவாக,இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான முகமது அசாருதீன் மற்றும் சவுரவ் கங்குலி, சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அதேநேரம், அந்தப் போட்டியை இந்தியா தவிர்க்கக் கூடாது என சுனில் கவாஸ்கர் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்த விவகாரம் பெரிய அளவில் விவாதத்தைக் கிளப்பியிருக்கும் நிலையில், பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது இதுகுறித்துப் பேசியிருக்கிறார். 

இந்தியா - பாகிஸ்தான் போட்டி

``உலகக்கோப்பை அட்டவணைப்படி இந்தியா  - பாகிஸ்தான் போட்டி நடைபெற வேண்டும். அந்தப் போட்டியைக் காண லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். அரசியல் லாபத்துக்காக கிரிக்கெட்டை குறிவைக்கக் கூடாது என நான் நினைக்கிறேன். 
புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் கிரிக்கெட் போட்டிகளைக் குறிவைப்பது வேதனையளிக்கிறது. அரசியலுடன் விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்புபடுத்தி, பாகிஸ்தான் இதுவரை பேசியதாக எனக்கு நினைவில்லை. விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும்’’ என்று சர்ஃப்ராஸ் அகமது கருத்து தெரிவித்திருக்கிறார். CricketPakistan.com.pk இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
 


[X] Close

[X] Close