தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி! - இலங்கை வரலாற்று சாதனை #SAvSL | Sri Lanka become the first sub-continent side to win a Test series in South Africa

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (23/02/2019)

கடைசி தொடர்பு:18:30 (23/02/2019)

தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி! - இலங்கை வரலாற்று சாதனை #SAvSL

தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இலங்கை அணி, தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது. 

இலங்கை வீரர்கள் குஷால் மெண்டிஸ் - ஒஷாடா பெர்ணாண்டோ

Photo Credit: ICC

தென்னாப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி, தனது முதல் இன்னிங்ஸில் 222 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் டிகாக் 86 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் விஸ்வா பெர்ணாண்டோ மற்றும் ரஜிதா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இதையடுத்து, முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி, 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் டிக்வெல்லா 42 ரன்கள் எடுத்தார். 

தென்னாப்பிரிக்க வீரர்கள்

Photo Credit: ICC

68 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு, இலங்கை பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணி, 128 ரன்களுக்குச் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் டூப்ளசிஸ் மட்டும் 50 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் 3 பேரைத் தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களைத் தாண்டவில்லை. இலங்கை தரப்பில் சுரங்கா லக்மல், 4 விக்கெட்டுகளும் டி செல்வா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

இலங்கை வீரர்

Photo Credit: ICC

197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் எடுத்திருந்தது. குஷால் மெண்டிஸ் 10 ரன்களுடனும் ஒஷாடா பெர்னாண்டோ 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். முந்தைய நாள் ஸ்கோருடன் மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இலங்கை அணி, 45.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ஒஷாடா பெர்னாண்டோ - குஷால் மெண்டிஸ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்தது. 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இலங்கை அணி தொடரையும் 2-0 என்ற கணக்கில் ஒயிட்  வாஷ் செய்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த முதல் அணி என்ற பெருமையையும் இலங்கை அணி பெற்றது. குஷால் மெண்டிஸ் ஆட்ட நாயகனாகவும் குஷால் பெரேரா தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

முதல் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 


[X] Close

[X] Close