டி20 போட்டியில் 278 ரன்கள் குவிப்பு! - ஒரே போட்டியில் 3 உலகச் சாதனைகள் படைத்த ஆப்கானிஸ்தான் #AFGIRE | Afghanistan score mammoth 278 for 3 against Ireland in 2nd t20

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (23/02/2019)

கடைசி தொடர்பு:21:30 (23/02/2019)

டி20 போட்டியில் 278 ரன்கள் குவிப்பு! - ஒரே போட்டியில் 3 உலகச் சாதனைகள் படைத்த ஆப்கானிஸ்தான் #AFGIRE

அயர்லாந்து அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் குவித்தது. 

ஆப்கானிஸ்தான் வீரர்கள்

Photo Credit: ICC

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் இடையிலான டி20 தொடர் சண்டிகரிப் டேராடூனில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் இடையிலான ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் உள்ள 2 மைதானங்களை ஆப்கானிஸ்தான் அணி, தனது சொந்த மைதானங்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். சமீபத்தில் வங்கதேச அணிக்கெதிரான டி20 தொடரையும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியாவில்தான் நடத்தியது. முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, வென்ற நிலையில் இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி, அயர்லாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கிறது. முதல் விக்கெட்டுக்கு அந்த அணியின் ஹஸ்ரத்துல்லா ஜஜாய் மற்றும் உஸ்மான் கனி ஜோடி  17.3 ஓவர்களில் 236 ரன்கள் சேர்த்தது. டி20 போட்டிகளைப் பொறுத்தவரை எந்தவொரு விக்கெட்டுக்கும் சேர்க்கப்பட்ட அதிகபட்ச பாட்னர்ஷிப் இதுவாகும். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 278 ரன்கள் சேர்த்தது. டி20 வரலாற்றில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பாக இலங்கை அணிக்கெதிராக பல்லகலேவில் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியில் 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் ஆஸ்திரேலிய அணி எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. 

ஆப்கானிஸ்தான் வீரர்கள்

Photo Credit: Afghanistan Cricket Board

அதேபோல், இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தானின் தொடக்க வீரர் ஹஸ்ரத்துல்லா ஜஜாய், 62 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் குவித்தார். 11 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்ஸர்களை அவர் அடித்தார். ஜஜாய் அடித்த 16 சிக்ஸர்களே, டி20 இன்னிங்ஸ் ஒன்றில் பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச சிக்ஸர்களாகும். 42 பந்துகளில் சதமடித்த ஜஜாய், டி20 போட்டிகளில் மூன்றாவது அதிவேக சதம் என்ற சாதனையையும் படைத்தார். மேலும், அவர் குவித்த 162 ரன்கள், டி20 வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.


[X] Close

[X] Close