வாலிபால் ப்ரோ லீக் முதல் சீசன் - சாம்பியன் பட்டத்தை தட்டியது சென்னை ஸ்பார்டன்ஸ் | Chennai spartans crowned champions in volleyball pro league season one

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (24/02/2019)

கடைசி தொடர்பு:15:30 (24/02/2019)

வாலிபால் ப்ரோ லீக் முதல் சீசன் - சாம்பியன் பட்டத்தை தட்டியது சென்னை ஸ்பார்டன்ஸ்

வாலிபால் ப்ரோ லீக் முதல் சீசன் -   சாம்பியன் பட்டத்தை தட்டியது சென்னை ஸ்பார்டன்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ், சென்னையின் எஃப்.சி வரிசையில், வாலிபால் ப்ரோ லீக் தொடரில் சாம்பியனானது சென்னை ஸ்பார்டன்ஸ் அணி. இந்தியாவின்  மூன்று முக்கிய லீக் தொடர்களிலும், சென்னையைச் சேர்ந்த அணிகள்தான் இப்போது நடப்பு சாம்பியன்.  

வாலிபால் ப்ரோ லீக் இறுதிப்போட்டி


ஐ.பி.எல், ஐ.எஸ்.எல் தொடர்களின் பட்டியலில் லேட்டஸ்டாக இணைந்தது வாலிபால் ப்ரோ லீக். இந்திய வாலிபால் கூட்டமைப்பு மற்றும் பேஸ்லைன் இந்தியா நிறுவனம் சார்பில் 'வாலிபால் ப்ரோ லீக்' முதலாவது சீசன் பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கியது.  சென்னை ஸ்பார்டன்ஸ், அகமதாபாத் டிஃபெண்டர்ஸ், காலிகட் ஹிரோஸ், யூ மும்பை வாலி, ஹைதராபாத் ப்ளாக்ஹாக்ஸ், கொச்சி ப்ளூஸ்பைக்கர்ஸ் என 6 அணிகள் இத்தொடரில் பங்கேற்றன.


கொச்சி ராஜீவ் உள்விளையாட்டு அரங்கத்திலும், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்திலும் நடைபெற்ற லீக் போட்டிகளின் முடிவில் காலிகட், கொச்சி, சென்னை, மும்பை ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.காலிகட் - மும்பை இடையேயான போட்டியில் காலிக்ட் ஹீரோஸும், சென்னை - கொச்சி மோதிய போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணியும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. சென்னை - காலிகட் மோதும் ஃபைனல்ஸ் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.


கிரிக்கெட், கால்பந்து என எந்த விளையாட்டாக இருந்தாலும் சென்னையைச் சேர்ந்த அணிக்கு, உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு பலமாக இருக்கும். அதே போல, ஹோம் கிரவுண்ட் ஆதரவுடன் களமிறங்கியது ஸ்பார்டன்ஸ் அணி.   லீக் சுற்றின் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற காலிகட் ஹீரோஸ், சென்னைக்கு டஃப் கொடுத்தது.

விறுவிறுப்பாகத் தொடங்கிய முதல் செட்டில், இரு அணிகளும் மாறி மாறி பாயிண்ட்ஸ் எடுத்தனர். ஸ்பைக்கர் நவீன் ராஜா, ரஸ்லான்ஸ் சொரோக்கின்ஸின் அதிரடி ஆட்டத்தால், மொத்தமாக ஐந்து புள்ளிகளை வென்ற சென்னை அணி, 15-11 என்ற கணக்கில் முதல் செட்டை வென்றது.

சென்னை ஸ்பார்டன்ஸ்

இரண்டாவது செட்டில் மூன்று புள்ளிகள் முன்னிலை பெற்ற காலிகட் அணி, சர்வீஸ் எரர் செய்தது. கேப்டன் ஜொரோம் வினித்தின் அடுத்தடுத்த தவறுகளால், எதிரணிக்கு பாயின்ட்ஸ் கிடைத்தன. 11-12 என்றிருந்த போது, அகின், வெர்ஹோஃப் மூன்று புள்ளிகள் பெற்றுத்தர, ஸ்பார்டன்ஸ் அணி இரண்டாவது செட்டை கைப்பற்றியது.


நெருக்கடியான கட்டத்திலும் சுதாரித்து விளையாடும் காலிகட் அணி, இறுதிப் போட்டியில் தடுமாறியது, எரர்களால் புள்ளிகளைப் பறிகொடுத்தது. இருந்தாலும், ஒவ்வொரு செட்டிலும் கடைசி வரை போராடிய காலிகட், சென்னைக்கு டஃப் கொடுத்தது. போட்டி முடிவில், 16- 14 என்ற புள்ளிக்கணக்கில் மூன்றாவது செட்டையும் கைப்பற்றியது சென்னை அணி. அதிகபட்சமாக, சென்னை அணியின் ரூடி வெர்ஹோஃப் 13 புள்ளிகள் பெற்றுத்தந்தார்.


சிறப்பான சர்வீஸும், தடுப்பாட்டமும் ஸ்பார்டன்ஸுக்கு சாதகமாக இருந்தது. செட்டைக் கைப்பற்ற ஒரு சில புள்ளிகளே இருந்த நிலையில், காலிகட் அணியின் அடுத்தடுத்த தவறுகள் போட்டியின் போக்கை சென்னையின் பக்கம் திருப்பியது. 3-0 என்ற நேர் செட் கணக்கில், காலிகட்டை வென்ற சென்னை ஸ்பார்டன்ஸ், வாலிபால் ப்ரோ லீக் தொடரின் முதல் சாம்பியனானது. சாம்பியனான சென்னை ஸ்பார்டன்ஸ் அணிக்கு 50 லட்சம் ரூபாயும், ரன்னர்ஸ் காலிகட் அணிக்கு 20 லட்சம் ரூபாயும் பரிசாக அளிக்கப்பட்டது. நவீன் ராஜா ஜேக்கப் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். 


[X] Close

[X] Close