``விதி மீறல்கள் நடந்துள்ளது!” -ஜெயசூர்யாவுக்கு 2ஆண்டுகள் தடை விதித்த ஐசிசி | Sanath Jayasuriya banned from all cricket for two years

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (27/02/2019)

கடைசி தொடர்பு:09:32 (27/02/2019)

``விதி மீறல்கள் நடந்துள்ளது!” -ஜெயசூர்யாவுக்கு 2ஆண்டுகள் தடை விதித்த ஐசிசி

ஜெயசூர்யா

இலங்கை கிரிக்கெட் அணி 1996-ம் ஆண்டு உலகக்கோப்பை வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர், ஜெயசூர்யா. உலகக்கோப்பை போட்டியில் தொடர்நாயகன் விருதையும் வென்றார். 2011-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றவர், இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துவந்தார்.  இடையில் சில காரணங்களால் இந்தப் பதவிகளில் இருந்து வெளியேறினார்.     2017-ம் ஆண்டில் மீண்டும் தேர்வுக்குழுவில் இடம்பிடித்தார்.

இந்த காலகட்டத்தில், ஜிம்பாப்வே அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. 15 வருடங்களுக்குப் பிறகு ஜிம்பாப்வே அணி இலங்கையில் களமிறங்கியது. இந்தத் தொடரை 3-2 என்ற கணக்கில் ஜிம்பாப்வே கைப்பற்றியது. இலங்கை மண்ணில் ஜிம்பாப்வே அணி கைப்பற்றிய முதல் வெற்றி இதுதான். அதுவரை எந்த வகையிலான கிரிக்கெட் தொடரையும் இலங்கை மண்ணில் அந்த அணி வென்றதில்லை. இது, ஜிம்பாப்வேக்கு வரலாற்று வெற்றியாகப் பார்க்கப்பட்டாலும், இலங்கை அணியைப் பொறுத்த வரை இது மோசமான தோல்வியாகக் கருதப்பட்டது. இந்தத் தோல்வி மற்றும் இலங்கை அணியின் செயல்பாடுகள் காரணமாக தேர்வுக்குழு பொறுப்பில் இருந்து ஜெயசூர்யா விலகினார்.

இலங்கை அணியின் மோசமான இந்தத் தோல்விக்குப் பின்னால் சூதாட்டம் இருக்கலாம் என்ற சந்தேகத்தைக் கிளப்பினார், முன்னாள் வீரர் பிரமோத்யா விக்ரமசிங்கே. உடனடியாகக் களத்தில் இறங்கியது ஐசிசி-யின் ஊழல் தடுப்புப் பிரிவு. விசாரணை ஆணையத்தில் ஆஜரான ஜெயசூர்யா, அதிகாரிகளின் கேள்விகளுக்கு சரியான பதில்களைக் கூறவில்லை என்றும், அவரது செல்போன் மற்றும் சிம்கார்டுகளை வழங்க மறுத்துவிட்டார் எனவும் கூறப்பட்டது. 

இதற்கிடையில் கடந்த ஆண்டு, “கிரிக்கெட்டில் நான் எந்த முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. எதிலும் வெளிப்படையாக நடந்துகொள்பவன்” என அறிக்கை வெளியிட்டார். ஐசிசி-யின் குற்றச்சாட்டுகளுக்கு ட்விட்டரில் தொடர்ந்து மறுப்பு தெரிவித்துவந்தார். ஆனால் தற்போது, ஐசிசி-யின் நடத்தை விதிமுறைகளை  மீறிவிட்டதாக அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஜெயசூர்யாவுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது ஐசிசி.
 

 


[X] Close

[X] Close