உலகக்கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸிகள்.. ஒரு ஃப்ளாஷ்பேக்! | The evolution of Indian cricket team jersey

வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (04/03/2019)

கடைசி தொடர்பு:18:55 (04/03/2019)

உலகக்கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸிகள்.. ஒரு ஃப்ளாஷ்பேக்!

ஒவ்வொரு உலகக்கோப்பையின் போதும், இந்திய அணியின் ஜெர்ஸிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, ஐ.பி.எல் முடிந்தவுடன் உலகக்கோப்பைக்காகக் காத்திருப்பார்கள் இந்திய ரசிகர்கள்.

உலகக்கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸிகள்.. ஒரு ஃப்ளாஷ்பேக்!

.பி.எல் கிரிக்கெட், உலகக்கோப்பை என 2019-ம் ஆண்டில் முக்கிய விளையாட்டு தொடர்கள், அடுத்தடுத்து நடக்க உள்ளன. மே மாதம் தொடங்கவுள்ள உலகக்கோப்பை தொடருக்கு, இந்திய அணி தயாராகிவருகிறது. இதன் முதல் கட்டமாக, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்ஸி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இரண்டு வகையான நீல நிறங்களில் தயாராகியுள்ள இந்த ஜெர்ஸியின் மற்றொரு சிறப்பு, இவை மறுசுழற்சி பாலிஸ்டரில் தயாரிக்கப்பட்டிருப்பதுதான். 2015-ம் ஆண்டு உலகக்கோப்பையிலும் மறுசுழற்சி முறையில் தயாரான ஜெர்ஸிகளையே இந்திய அணி பயன்படுத்தியது.

கேப்டன் விராட் கோலி, மகேந்திர சிங் தோனி, ரஹானே, ப்ரித்வி ஷா ஆகியோரும், பெண்கள் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமிமா ராட்ரிக்ஸ் ஆகியோரும் ஜெர்ஸி அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். கிரிக்கெட் உலகக்கோப்பை ஜுரம் தொடங்கியுள்ள நிலையில், உலகக்கோப்பை தொடர்களில் இந்திய கிரிக்கெட் அணி ஜெர்ஸிகளின் ஃப்ளாஷ்பேக்கைப் பார்ப்போம்

1975 – 1979 – 1983 – 1987

கிரிக்கெட் உலகக்கோப்பையின் முதல் நான்கு தொடர்களிலும், இந்திய அணி வெள்ளை நிற ஜெர்ஸியை அணிந்து விளையாடியது. 1975, 79 தொடர்களில் நாக்-அவுட் சுற்றிலேயே வெளியேறிய இந்திய அணி, அடுத்த உலகக்கோப்பையில் பலமான கம்-பேக் கொடுத்தது. 1983-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையை, இந்திய ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, 43 ரன் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளைத் தோற்கடித்து முதல்முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

இந்திய கிரிக்கெட் ஜெர்ஸி

Images Courtesy: jerseysbyakshay

1992

1992-ம் ஆண்டு உலகக்கோப்பையில்தான் முதன்முறையாக கலர் ஜெர்ஸிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகளுடன் தென் ஆப்பிரிக்கா முதன்முறையாக உலகக்கோப்பையில் பங்கேற்றது. முகமது அசாருதின் தலைமையிலான இந்திய அணி, டார்க் ப்ளூ ஜெர்ஸியை அணிந்திருந்தது. சச்சின் டெண்டுல்கரின் முதல் உலகக்கோப்பை தொடர் இதுதான். இப்போதைய பாகிஸ்தான் நாட்டுப் பிரதமரான இம்ரான் கான் தலைமையிலான அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 22 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தைத் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைத் தட்டிச்சென்றது

1992 உலகக்கோப்பை

1996

பாகிஸ்தான், இந்தியா, இலங்கையில் நடைபெற்ற 1996 உலகக்கோப்பையில், இலகுவான நீல நிறமும், மஞ்சள் நிற பட்டையும்கொண்ட ஜெர்ஸியை இந்திய அணி அணிந்திருந்தது. ரெயின்போ நிறங்களிலான க்ராஸ்-ஓவரும் ஜெர்ஸியில் இருந்தது. அசாருதின் கேப்டன்சியில் அரை இறுதி வரை முன்னேறிய இந்திய அணி, கொல்கத்தா ஈடன் கார்டனில் இலங்கை அணியிடம் தோல்வியைத் தழுவியது.

1996 உலகக்கோப்பையில் சச்சின் - டிராவிட்

1999

1996 உலகக்கோப்பையைப்போலவே நீலம், மஞ்சள் நிற காம்பினேஷனில் உருவான ஜெர்ஸியை அணிந்திருந்தது இந்திய அணி. 12 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில், அசாருதின் தலைமையிலான இந்திய அணி, குரூப் `ஏ’வில் இடம்பிடித்தது. `சூப்பர் 6' சுற்றில், ஆறாவது இடம் பிடித்த இந்தியா, தொடரிலிருந்து வெளியேறியது.

2003

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 2003 உலகக்கோப்பையில், கங்குலி தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியது. ``1983 உலகக்கோப்பைக்குப் பிறகு, இந்திய அணியின் சிறப்பான உலகக்கோப்பை தொடர் இது'' என்று ரசிகர்கள் கொண்டாடினர். இந்தியக் கொடியின் மூவர்ணம், நீல ஜெர்ஸி, கறுப்பு நிற பேட்ச்கொண்ட ஜெர்ஸியை அணிந்திருந்தது இந்திய அணி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில், இந்திய அணி தோல்வியடைந்து இரண்டாவது இடம் பிடித்தது.

Indian team jersey

Images Courtesy: jerseysbyakshay

2007

2007-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில், இந்திய அணியின் ஜெர்ஸியில் மீண்டும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. 1996 ஜெர்ஸியைப்போல இலகுவான நீல நிறம், இந்தியக் கொடியின் மூவர்ணம் வலதுபக்கம் கார்னரில் வடிவமைக்கப்பட்டது. இந்த உலகக்கோப்பை தொடரில் 16 அணிகள் பங்கேற்றன. டிராவிட் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, `சூப்பர் 8' சுற்றுக்குத் தகுதிபெறாமல் தொடரிலிருந்து வெளியேறியது, ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றம்.

2011

1983-ம் உலகக்கோப்பையை ரிப்பீட் செய்த இந்திய அணி, இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி கோப்பையை வென்றது. இந்த முறை டார்க் ப்ளூ நிறத்திலான ஜெர்ஸி, ஆரஞ்சு நிறத்தில் இந்தியா என எழுதியிருந்த ஜெர்ஸியை அணிந்திருந்தது இந்திய அணி.

2015

2015 உலகக்கோப்பையில், தோனி தலைமையிலான இந்திய அணி அரை இறுதி வரை முன்னேறியது. இந்த உலகக்கோப்பையில்தான் முதன்முறையாக மறுசுழற்சியால் தயாரிக்கப்பட்ட ஜெர்ஸியை அணிந்திருந்தனர் இந்திய வீரர்கள். 2011 ஜெர்ஸியைப் போலவே டார்க் ப்ளூ நிறத்திலான ஜெர்ஸியில் விளையாடினர். ஆஸ்திரேலியாவுடனான அரை இறுதியில் தோல்வியடைந்த இந்திய அணி, கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டது.

2015

Images Courtesy: jerseysbyakshay

ஒவ்வோர் உலகக்கோப்பையின்போதும் இந்திய அணியின் ஜெர்ஸிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்திய அணியின் ஜெர்ஸி வரலாற்றை கிராஃபிக் டிசைன் செய்துள்ளார், இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவர். அதை `ஜெர்ஸிஸ் பை அக்‌ஷய்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிவருகிறார்.

ஐ.பி.எல் தொடரின்போது மஞ்சள், சிவப்பு என வெவ்வேறு அணிகளுக்காகப் போட்டியிட்டுக்கொள்ளும் இந்திய ரசிகர்கள், உலகக்கோப்பையின்போது ப்ளூ ஜெர்ஸி வீரர்களுக்காக ஒன்றுசேருவது வழக்கமாகிவிட்டது. இந்த ஆண்டு, ஐ.பி.எல் முடிந்தவுடன் உலகக்கோப்பைக்காகக் காத்திருப்பார்கள் இந்திய ரசிகர்கள்.

கமான் இந்தியா...!


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close